சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேரிடம் உதவி கலெக்டர் விசாரணை

கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேரிடம் உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார். பின்னர் வெளியே வந்த ஒருவர், தான் கீழே விழுந்து பல் உடைந்ததாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-03-29 20:21 GMT

சேரன்மாதேவி:

கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேரிடம் உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார். பின்னர் வெளியே வந்த ஒருவர், தான் கீழே விழுந்து பல் உடைந்ததாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பணி இடைநீக்கம்

நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பல்வீர்சிங் என்பவர் பற்களை பிடுங்கியதாக புகார் எழுந்தது.

இதையடுத்து அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். பின்னர் நேற்று அவர் அதிரடியாக பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டார்.

உதவி கலெக்டர் விசாரணை

இதற்கிடையே பல்வீர்சிங் மீதான புகார் தொடர்பாக விசாரணை நடத்த சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அவர் விசாரணை நடத்தி வருகிறார்.

கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த லெட்சுமி சங்கர் என்பவர் ஏற்கனவே உதவி கலெக்டர் முன் ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த சூர்யா என்பவர் உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் முன்பு ஆஜரானார். அவரிடம் உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார். பின்னர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறும்போது, தான் கீழே விழுந்ததில் பல் உடைந்து விட்டது, என்றார்.

4 போலீசார்

அதன்பின்னர் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப், 2 பெண் போலீசார் உள்பட 4 போலீசார் ஆஜராகி விளக்கம் அளித்தனர். பின்னர் அந்த 4 பேரும் அலுவலகத்தில் இருந்து சென்று விட்டனர்.

மேலும் 7 பேர் சேரன்மாதேவி உதவி கலெக்டர் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க அலுவலகம் முன் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதில் சம்மன் அனுப்பப்பட்ட சுபாஷ் என்பவரிடம் மட்டுமே உதவி கலெக்டர் விசாரணை மேற்கொண்டார்.

உதவி கலெக்டர் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வந்தவர்களால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்