கொலை வழக்கு - 17 வயது சிறுவன் உள்பட 6 பேர் கைது

திண்டுக்கல் அருகே கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். வீடு விற்ற வகையில் புரோக்கர் கமிஷன் கொடுக்காததால் தீர்த்து கட்டினர்.

Update: 2023-08-10 22:00 GMT

கட்டிட தொழிலாளி

திண்டுக்கல் அருகே உள்ள பொன்மாந்துறை புதுப்பட்டியை சேர்ந்தவர் இருளப்பன் என்ற ராசு (வயது 40). கட்டிடத்தொழிலாளி. கடந்த 7-ந்தேதி மதியம் தனது வீட்டில் இருளப்பன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அரிவாள், கத்தியுடன் புகுந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்தநிலையில் இருளப்பன் கொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல் பொன்மாந்துறை புதுப்பட்டியை சேர்ந்த ரெங்கமூர்த்தி (40), வினோத் (23), ரஞ்சித் குமார் (21), பூபதி ராஜா (20) ஆகியோர் கடந்த 8-ந்தேதி நெல்லை கோர்ட்டில் சரண் அடைந்தனர். தற்போது இவர்கள், பாளையங்கோட்டை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளனர்.

17 வயது சிறுவன்

இதற்கிடையே மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க திண்டுக்கல் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு உதயகுமார் மேற்பார்வையில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் அழகு பாண்டி, அருண்நாராயணன் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

வத்தலகுண்டு பைபாஸ் சாலையில் தனிப்படை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் பொன்மாந்துறை புதுப்பட்டியை சேர்ந்த பிரபு (19) மற்றும் 17 வயது சிறுவன் என்று தெரியவந்தது. இருளப்பன் கொலை வழக்கில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் 4 பேர் கைது

இதேபோல் திண்டுக்கல்லில், பழனி பைபாஸ் சாலையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் ராமநாதபுரத்தை சேர்ந்த சக்திவேல் (26), கணேஷ்குமார் (27), மருதாணி குளத்தை சேர்ந்த கார்த்திக் (25), செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விக்னேஷ் (26) என்றும், இருளப்பனை தீர்த்து கட்டியதில் முக்கிய பங்கு வகித்தவர்கள் என்றும் தெரியவந்தது. இதையடுத்து இருளப்பன் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

புரோக்கர் கமிஷன்

இருளப்பன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் கூறுகையில், கொலை செய்யப்பட்ட இருளப்பனுக்கு கொட்டப்பட்டியில் வீடு ஒன்று இருந்தது. அந்த வீட்டை பொன்மாந்துறை புதுப்பட்டியை சேர்ந்த ரெங்கமூர்த்தி, சண்முகவேல் ஆகியோர் விற்பனை செய்து கொடுத்துள்ளனர். அதற்கு இருளப்பனிடம் அவர்கள் புரோக்கர் கமிஷன் கேட்டனர்.

ஆனால் கமிஷன் தொகை கொடுக்காமல் இருளப்பன் நீண்ட நாட்களாக இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரெங்கமூர்த்தி வீடு கட்டுவதற்கு மணல், செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை தருமாறு இருளப்பனிடம் கேட்டார். அதற்கும், இருளப்பன் தர மறுத்துள்ளார். இதனால் ரெங்கமூர்த்தி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இருளப்பனை தீர்த்து கட்டியதாக வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சண்முகவேலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்