6 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2-வது நாளாக தீவிர விசாரணை
அன்புஜோதி ஆசிரம வழக்கில் கைதான நிர்வாகி உள்ளிட்ட 6 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2-வது நாளாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரத்தை அடுத்த குண்டலப்புலியூரில் அன்புஜோதி ஆசிரமம் இயங்கி வந்தது. இங்கு அரசு அதிகாரிகளும், கெடார் போலீசாரும் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அந்த ஆசிரமம் அனுமதியின்றி இயங்கி வந்ததும், அங்கிருந்த மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர் அடித்து துன்புறுத்தப்பட்டு சித்ரவதை செய்து வந்ததும், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதும், சிலர் ஆசிரமத்தில் இருந்து மாயமாகி போனதும் தெரியவந்தது. இதையடுத்து ஆசிரமத்தில் இருந்த 143 பேரை அதிகாரிகள் மீட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து வெவ்வேறு காப்பகங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி, அவரது மனைவி மரியா ஜூபின் மற்றும் பணியாளர்கள் 7 பேர் என 9 பேரை கெடார் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சி.பி.சி.ஐ.டி. போலீசார்
இதனிடைய இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து இச்சம்பவத்தில் கைதாகி சிறையில் இருக்கும் ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி, அவரது மனைவி மரியாஜூபின் உள்ளிட்ட 8 பேரை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் முதல் போலீஸ் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது அதில் முத்துமாரி, சதீஷ் ஆகியோர் மனநிலை சரியில்லாதது தெரியவந்தது. இதனால் அவர்கள் இருவரையும் மீண்டும் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
6 பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
மற்ற 6 பேரிடமும் நேற்று 2-வது நாளாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்து கருணைப்பயணம் என்ற பெயரில் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் விவரம், இதற்காக ஜூபின்பேபி எவ்வளவு பணம் பெற்றார்? , ஆசிரமத்தில் தங்கியிருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்யப்பட்டனரா, பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டனரா? என அவர்கள் 6 பேரிடமும் பல்வேறு கேள்விகளை கேட்டு கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.