வாலிபர் கொலை வழக்கில் 6 பேர் கைது

பாணாவரம் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். நண்பரின் கொலைக்கு பழிக்கு பழியாக கொன்றதாக அவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.;

Update:2023-07-07 22:34 IST

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கொலை முயற்சி வழக்கு

ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரத்தை சேர்ந்தவர் வண்டு என்ற ராஜேஷ் (வயது 30). இவர் மீது வழிப்பறி, கொலை முயற்சி உள்பட பல வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இவர் சரத்குமார் என்பவரை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

இதற்கு இடையில் ராஜேஷின் கூட்டாளிகள் சரத்குமாரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. அதனால் சரத்குமாரின் நண்பர்கள் ராஜேஷை பழி வாங்க வேண்டும் என காத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜேஷ் கொலை செய்யப்பட்டு சோளிங்கர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்.

6 பேர் கைது

இந்த சம்பவம் குறித்து காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சரத்குமாரின் நண்பர்கள் இந்த கொலையை செய்தது தெரியவந்தது.

அதன்பேரில் பாணாவரம் தைல தோப்பில் பதுங்கி இருந்த 6 பேரை ரெயில்வே போலீசார் மற்றும் தனிப்படை போலீசார், பாணாவரம் போலீசார் ஆகியோர் பிடித்தனர். பின்னர் அவர்களை காட்பாடி ரெயில்வே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் பாணாவரம் கீழந்துரை புதுதெருவை சேர்ந்த ஆகாஷ் (வயது 22). மாரிமுத்து என்ற விக்ரம் (23), பஜனை கோவில் தெருவை சேர்ந்த தீபக்குமார் (23), நாகவேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்த வெங்கட்ரத்னம் (22), பாணாவரம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த கிளிண்டன் என்ற வினோத்குமார் (23), வெளிதாங்கிபுரம் பஜனை கோவில் தெரு சேர்ந்த அப்பு என்ற சதீஷ்குமார் (24) என்பதும், இவர்கள் 6 பேரும் சேர்ந்து கொலை செய்ததும் தெரிய வந்தது.

பழிக்கு பழியாக

அவர்கள் சரத்குமாரின் கொலைக்கு பழிக்கு பழியாகவும், முன்விரோதம் காரணமாகவும் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இது குறித்து காட்பாடி ரெயில்வே போலீசார் மேலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்