2-ம் நிலை காவலர் பதவிகளுக்கான எழுத்து தேர்வினை 5,466 பேர் எழுதினர்
பெரம்பலூர், அரியலூரில் 2-ம் நிலை காவலர் பதவிகளுக்கான எழுத்து தேர்வினை 5,466 பேர் எழுதினர். 1,368 பேர் தேர்வு எழுத வரவில்லை.
எழுத்து தேர்வு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் மூலம் காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகளில் உள்ள 2-ம் நிலை காவலர் பதவிகளுக்கான 3 ஆயிரத்து 552 காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. அதன்படி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் இருந்து இந்த தேர்வினை எழுத 5,347 ஆண்களும், 1,487 பெண்களும் என மொத்தம் 6,834 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் எழுத்து தேர்வு பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகத்திலும், ஸ்ரீராமகிருஷ்ணா கல்லூரி வளாகத்திலும் உள்ள தேர்வு மையங்களில் நடந்தது.
சோதனை
தேர்வு எழுத தேர்வாளர்கள் காலை 8.30 மணிக்கு முன்பாகவே தேர்வு மையத்திற்கு வந்த வண்ணம் இருந்தனர். அதில் ஆண், பெண்களை தனித்தனியாக வரிசைப்படுத்தி போலீசார் நிற்க வைத்தனர். தேர்வு எழுத வந்த ஆண்களை ஆண் போலீசாரும், பெண்களை பெண் போலீசாரும் சோதனையிட்டும், மெட்டல் டிடெக்டர் எந்திரம் வழியாக வரச்சொல்லியும், மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனையிட்ட பிறகே தேர்வு மையத்திற்கு உள்ளே செல்ல அவர்களை அனுமதித்தனர். தேர்வாளர்கள் பேனா, தேர்வு நுழைவுச்சீட்டு, அடையாள அட்டை ஆகியவற்றை மட்டும் தேர்வறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மின்சாதனங்களுக்கு தடை
மேலும் தேர்வு மையத்திற்கு கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள செல்போன், புளூடூத், கால்குலேட்டர் போன்ற அதிநவீன மின் சாதனங்களையும், கைக்கடிகாரம், தொலைநகலி போன்ற சாதனங்களையும், பென்சில் ஆகியவற்றையும் தேர்வாளர்கள் கொண்டு செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். அதனை கொண்டு வந்தவர்களிடம் இருந்து, அந்த பொருட்களை போலீசார் வாங்கி வைத்து, தேர்வு முடிந்த பிறகு அவர்களிடம் மீண்டும் ஒப்படைத்தனர்.
தேர்வு எழுத வந்த திருமணமான பெண்கள் தங்களது கைக்குழந்தைகளை உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டு, தேர்வு எழுத சென்றதை காணமுடிந்தது. கடைசி நேரத்தில் தேர்வு எழுத வந்த தேர்வாளர்கள் உடற்தகுதி தேர்வில் ஓடுவது போல் தேர்வு மையத்துக்கு ஓடியதையும் காணமுடிந்தது.
5,466 பேர் எழுதினர்
சரியாக காலை 10 மணிக்கு தொடங்கிய எழுத்து தேர்வு 12.40 மணிக்கு முடிந்தது. பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் இருந்து தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 6,834 பேரில், 4,302 ஆண்களும், 1,164 பெண்களும் என மொத்தம் 5,466 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 1,045 ஆண்களும், 323 பெண்களும் என மொத்தம் 1,368 பேர் தேர்வு எழுத வரவில்லை.
எழுத்து தேர்வினை திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி ஆகியோர் பார்வையிட்டனர். தேர்வு மைய பணி மற்றும் பாதுகாப்பு பணியில் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.