சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 5,430 கனஅடி நீர் வெளியேற்றம்

அணையின் பாதுகாப்பு கருதி சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 5,430 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது.

Update: 2022-10-15 16:54 GMT

தண்டராம்பட்டு

அணையின் பாதுகாப்பு கருதி சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 5,430 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது.

சாத்தனூர் அணை

திருவண்ணாமலை மாவட்டம் தண்டாம்பட்டு அருகில் உள்ள சாத்தனூர்அணையில் இருந்து திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டதாகும். இதில் 7321 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைக்க முடியும். தற்போது 116.15 அடி உயரத்திற்கு அதாவது 6698 மில்லியன் கனஅடி நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவ மழை பெய்ய தொடங்கி விட்டதால் சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 3760 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

எனவே வெள்ளப்பெருக்கால் அணை உடைந்து விடாமல் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மாலை நிலவரப்படி சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 5,430 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதில் 4980 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றிலும் 450 கன அடி நீர் பாசன கால்வாயிலும் திறந்து விடப்படுகிறது.

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

இதனால் சாத்தனூர் அணையில் இருந்து திருக்கோவிலூர் வழியாக கடலூர் செல்லும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து காணப்படுகிறது.

மேலும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கினால் சாத்தனூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரானது வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே பொதுமக்கள் யாரும் ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் என்றும் கரையோர வாழ் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்