மின் கட்டண உயர்வை கண்டித்து 500 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடல்

மின் கட்டண உயர்வை கண்டித்து பெரம்பலூர் மாவட்டத்தில் 500 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன.

Update: 2023-09-25 18:57 GMT

வேலை நிறுத்தம்

மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பெரம்பலூர் மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் மற்றும் சிட்கோ தொழிற்பேட்டையினர் நேற்று ஒரு நாள் தங்களது தொழில் நிறுவனத்தை அடைத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள், சிட்கோவில் உள்ள தொழிற்பேட்டைகள் மூடப்பட்டிருந்தன. இது தொடர்பாக பெரம்பலூர் சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் தலைவர் குமார் தலைமையில், அச்சங்கத்தினர் மாவட்ட கலெக்டரை கற்பகத்தை சந்தித்து மனு கொடுத்தனர்.

முடக்கிவிடும் அபாயம்

அந்த மனுவில், கடந்த ஆண்டு அதிகப்படியாக உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இது குறித்து பலமுறை தமிழக அரசிடம் முறையிட்டும் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. மேலும் வருடா வருடம் உயர்த்தப்படும் மின் கட்டணம் குறு, சிறு மற்றும் தொழிற்சாலைகளை நிரந்தரமாக முடக்கிவிடும் அபாயம் உள்ளது.

எனவே சிறு மற்றும் குறு தொழில்களுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டனத்தை தமிழக முதல்-அமைச்சர் மறுபரிசீலனை செய்ய மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும், என்று கூறியிருந்தனர். பின்னர் சங்கத்தின் தலைவர் குமார் நிருபர்களிடம் கூறுகையில், மின் கட்டண உயர்வை கண்டித்து பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 500 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன, என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்