200 ரூபாய் வைக்க வேண்டிய இடத்தில் ரூ.500 நோட்டு... வாடிக்கையாளர்களுக்கு பணத்தை அள்ளி கொடுத்த ஏ.டி.எம். எந்திரம்

ஏ.டி.எம். எந்திரத்தில் 200 ரூபாய் வைக்க வேண்டிய இடத்தில் ரூ.500 நோட்டு வைத்ததால் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை அள்ளி கொடுத்தது. இதனால் போட்டி போட்டு எடுத்து சென்றனர்.

Update: 2023-02-03 08:37 GMT

சென்னை அம்பத்தூர் பழைய சி.டி.எச். சாலையில் இந்தியன் வங்கி உள்ளது. அதே கட்டிடத்தில் அந்த வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று அதிகாலை இந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் வந்தனர்.

அப்போது ஏ.டி.எம். எந்திரம் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட பணத்துக்கு பதிலாக தாராளமாக பணத்தை அள்ளி வழங்கியது. ஆனால் அவர்களின் செல்போனுக்கு குறிப்பிட்ட பணம் மட்டும் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது.

இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள், போட்டி போட்டு தங்கள் ஏ.டி.எம். கார்டு மூலம் பணத்தை எடுத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அம்பத்தூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவர் ரூ.8 ஆயிரம் எடுக்க முயன்றபோது அவருக்கு கூடுதலாக ரூ.12 ஆயிரம் சேர்த்து ரூ.20 ஆயிரம் வந்தது.

அதேபோல் திருமுல்லைவாயலைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் ரூ.20 ஆயிரம் எடுக்க முயன்றபோது, அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.8 ஆயிரம் மட்டும் எடுக்கலாம் என ஏ.டி.எம். எந்திரத்தில் தகவல் காண்பித்தது. அதன்படி அவர் ரூ.8 ஆயிரம் எடுக்க முயன்றபோது அவருக்கும் ரூ.20 ஆயிரத்தை அள்ளி கொடுத்தது.

இதே போல் 10-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கும் கூடுதலாக பணம் வந்தது. ஏ.டி.எம். எந்திரத்தின் இந்த தாராள பண மழையால் அங்கு ஏராளமானவர்கள் குவிந்தனர்.

இவ்வாறு ஏ.டி.எம். மையத்தில் கூடுதலாக பணத்தை எடுத்த வாடிக்கையாளர்களில் 6 பேர் மட்டும் வங்கி திறக்கும் வரை அங்கேயே காத்திருந்து, வங்கி திறந்ததும் இது தொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் எழுதிகொடுத்து கூடுதலாக வந்த பணத்தை திருப்பி கொடுத்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரிகள், ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வைக்கும் தனியார் நிறுவன ஊழியர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்த ஏ.டி.எம். எந்திரத்தை சரிபார்த்தபோது, 200 ரூபாய் நோட்டுகள் வைக்க வேண்டிய இடத்தில் ரூ.500 நோட்டுகள் வைத்திருந்ததும், இதனால் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை வாரி வழங்கியதும் தெரியவந்தது. உடனடியாக ஏ.டி.எம்.எந்திரம் சரி செய்யப்பட்டது.

இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் கூடுதலாக பணம் எடுத்தவர்கள் யார்? என்ற விவரத்தை வைத்து வங்கி அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்