500 மதுக்கடைகளை மூடியது மகிழ்ச்சி தருகிறதா?

500 மதுக்கடைகளை மூடியது மகிழ்ச்சி தருகிறதா? என்று தமிழக அரசின் இந்த நடவடிக்கை குறித்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள்.

Update: 2023-06-22 18:45 GMT

தமிழ்நாடு சட்டசபையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக்கோரிக்கையின் போது ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதாவது பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகே உள்ள மதுபானக்கடைகள் மூடப்படும் என்பதே அந்த அறிவிப்பு ஆகும்.

500 மதுக்கடைகள் மூடல்

தமிழகத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 332 டாஸ்மாக் மதுபானக் கடைகள் இருக்கின்றன. அதில் மூடுவதற்காக 500 கடைகள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டது. அந்த 500 கடைகளும் நேற்று முதல் மூடப்பட்டு விட்டன.

தேனி மாவட்டத்தில் மொத்தம் 90 கடைகள் செயல்பட்டன. அதில் 9 கடைகள் மூடப்பட்டன. மூடப்பட்ட கடைகளில் இருந்த மதுபான பாட்டில்கள் லாரிகளில் ஏற்றப்பட்டு கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள டாஸ்மாக் மதுபான குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டன. போலீஸ் பாதுகாப்புடன் மதுபான பாட்டில்கள் லாரியில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டன. இந்த கடைகள் மூடப்பட்டது தொடர்பாக அங்கு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. கடைகள் மூடப்பட்டது தெரியாமல் மதுபான பிரியர்கள் மது வாங்க வந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கை குறித்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

வரவேற்கத்தக்கது

பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்த இல்லத்தரசி மாரீஸ்வரி கூறும்போது, 'தமிழகத்தில் மதுவால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மதுவிற்பனையை முற்றிலும் நிறுத்தினால் நன்றாக இருக்கும். முதல்கட்டமாக 500 மதுக்கடைகளை மூடி இருப்பது வரவேற்கத்தக்கது. அதேபோல், விரைவில் படிப்படியாக அனைத்து கடைகளையும் மூட வேண்டும். மதுக்கடைகள் இல்லாமல் இருந்தால் பல இடங்களில் சண்டை, சச்சரவுகள் ஏற்படாமல் இருக்கும். பள்ளி, கல்லூரிகள் அருகில் இருக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும்' என்றார்.

வயல்பட்டியை சேர்ந்த இல்லத்தரசி புனிதா கூறும்போது, 'தமிழகத்தில் மதுவால் நாள்தோறும் ஏராளமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி வாழ்வை தொலைக்கின்றனர். குடும்பங்களில் வன்முறைக்கு வித்திடும் அரக்கனாக மதுபானம் இருக்கிறது. மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற மக்களின் உணர்வை மதித்து முதற்கட்டமாக தமிழகத்தில் 500 மதுபான கடைகளை மூடியதை வரவேற்கிறேன். இது 500 என்பதோடு நின்றுவிடக் கூடாது. படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்' என்றார்.

ஏமாற்றம் அளிக்கிறது

தேனி நகர ஓட்டல் உரிமையாளர்கள் சங்க செயலாளர் பொன்முருகன் கூறும்போது, 'மதுக்கடைகள் அருகில் அமைந்துள்ள ஓட்டல்களில் வருமானம் நன்றாக இருக்கும் என்ற பொதுவான பார்வை இருக்கிறது. ஒருபுறம் வருமானம் வந்தாலும் மற்றொரு புறம் மதுப்பிரியர்களால் பல்வேறு இன்னல்களை ஓட்டல் உரிமையாளர்கள் சந்தித்து வருகின்றனர். தற்போது 500 மதுக்கடைகள் மூடப்பட்டது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் மக்கள் மூட வேண்டும் என்று வலியுறுத்திய பல இடங்களில் கடைகள் மூடப்படவில்லை. குறிப்பாக தேனி நகர் பழைய பஸ் நிலையம் எதிரே, பழைய பஸ் நிலையம் பின்புறம், பஸ் நிலையம் நுழைவு வாயில் எதிரே காட்டுபத்திரகாளியம்மன் கோவில் செல்லும் வழி ஆகிய இடங்களில் எல்லாம் மதுக்கடைகள் செயல்படுகின்றன. இந்த கடைகளால் மக்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டு வருகின்றன. நகருக்குள் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள மதுக்கடைகளை மூடினால் இன்னும் சிறப்பாக இருக்கும்' என்றார்.

வருமானம் இல்லாத கடைகள்

தேனி அல்லிநகரத்தை சேர்ந்த கட்டிட உள்வடிவமைப்பு தொழில் செய்து வரும் மாரி கூறும்போது, 'மதுவால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. குடியிருப்பு பகுதிகளில் அமைந்துள்ள மதுக்கடைகளால் பெண்கள், மாணவ, மாணவிகள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். தமிழக அரசு 500 மதுபான கடைகள் மூடப்படும் என்று அறிவித்தபோது, மக்களின் பாதிப்புகளை கருத்தில் கொண்டு மூடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால், ஊருக்கு வெளியே போதிய வருமானம் இன்றி செயல்பட்ட கடைகளை கணக்கெடுத்து அவற்றை மூடி இருப்பதாக தெரிகிறது. தேனி புதிய பஸ் நிலையம் பகுதியில் 5 டாஸ்மாக் கடைகள், 3 தனியார் பார்கள் உள்ளன. அவற்றில் 2 டாஸ்மாக் கடைகள் தான் மூடப்பட்டு உள்ளன. மூடப்பட்ட கடைகளில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் மற்ற மதுக்கடைகள் உள்ளன. இதனால், மதுப்பிரியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவது இல்லை' என்றார்.

தனியார் மதுபான பார்

கம்பத்தில் பேக்கரி கடை நடத்தி வரும் மைதீன் கூறும்போது, '500 மதுக்கடைகளை மூடியது நல்ல விசயம். கம்பம் அருகே க.புதுப்பட்டியில் ஊருக்கு வெளியே இருந்த மதுக்கடை மூடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அதே ஊரில் தனியார் மதுபான பார் செயல்படுகிறது. இதனால், மதுபான பிரியர்கள் வெளியூருக்கு சென்று மதுவாங்குவதை விட தனியார் மதுபான பார்களில் அதிக பணம் கொடுத்து மது அருந்தும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதே வேகத்தில் குடியிருப்பு, வழிபாட்டு தலங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளையும் மூடினால் நன்றாக இருக்கும்' என்றார்.

தேனி மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்க தலைவர் மோகன் கூறும்போது, '500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை வரவேற்கிறோம். மற்றொரு புறம் மூடப்பட்ட கடைகளில் பணியாற்றியவர்களின் வேலைக்கும் உத்தரவாதம் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு மாற்று பணியிடம் வழங்க வேண்டும். தற்போது மாவட்டத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த கடைகள் தான் மூடப்பட்டுள்ளன. நகர் மையத்தில் அமைந்துள்ள அனைத்து மதுபான பார்களையும் இடமாற்றம் செய்ய வேண்டும். புதிதாக மதுபான கடைகளை திறக்கவோ, மதுபான பார்களுக்கு அனுமதி கொடுக்கவோ அரசு முன்வரக் கூடாது' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்