2023 உலகக் கோப்பை கிரிக்கெட்; போட்டி அட்டவணை வெளியீடு

2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை ஐசிசி வெளியிட்டுள்ளது.

Update: 2023-06-27 08:07 GMT

Twitter : @ICC

அகமதாபாத், 

இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பை தொடரில் ஏற்கனவே எட்டு அணிகள் நேரடியாக தகுதி பெற்று விட்டன. அந்த எட்டு அணிகள் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகும்.

அந்த எட்டு அணிகளை தவிர்த்து எஞ்சிய இரு இடங்களுக்கான அணிகளை தேர்வு செய்வதற்காக தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வருகிறது. இதிலிருந்து இரு அணிகள் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை இன்று ஐசிசி அறிவித்தது. அதன்படி அக்டோபர் 5-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19-ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் இந்தியா முழுவதும் 10 மைதானங்களில் போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த 10 மைதானங்கள் டெல்லி, தர்மசாலா, மும்பை, லக்னோ, கொல்கத்தா, அகமதாபாத், புனே, சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகும். இதில் சென்னையில் மட்டும் 5 போட்டிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி ஆட்டங்கள் திருவனந்தபுரம் மற்றும் கவுகாத்தி மைதானத்தில் நடைபெறும் எனவும் ஐசிசி தெரிவித்தது.

* முதல் போட்டி இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே, அக்டோபர் 5-ம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

* இந்தியாவின் முதல் ஆட்டம், அக்டோபர் 8-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

* இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் அக்டோபர் 15-ம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.

* ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நவம்பர் 19-ம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்