பிஸ்கட் தருவதாக கூறி சிறுமியிடம் சில்மிஷம்; முதியவருக்கு 5 ஆண்டு சிறை விழுப்புரம் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

பிஸ்கட் தருவதாக கூறி சிறுமியிடம் சில்மிஷம் செய்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2022-10-28 18:45 GMT


சிறுமியிடம் சில்மிஷம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் புதுஉச்சிமேடு வடக்கு தெருவை சேர்ந்தவர் சன்னியாசி (வயது 70). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு கடந்த 10.9.2016 அன்று அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி பிஸ்கட் வாங்க சென்றுள்ளார்.

அப்போது சன்னியாசி, அந்த சிறுமியிடம் பிஸ்கட் தருவதாக கூறி நைசாக பேச்சுக்கொடுத்தபடி சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார்.

முதியவருக்கு 5 ஆண்டு சிறை

இது பற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர், வரஞ்சரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் சன்னியாசி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட சன்னியாசிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.2 லட்சத்தை அரசு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட சன்னியாசி, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலா ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்