கணவன்-மனைவிக்கு தலா 5 ஆண்டுகள் சிறை

கணவன்-மனைவிக்கு தலா 5 ஆண்டுகள் சிறை

Update: 2023-05-05 19:28 GMT

கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த கணவன்-மனைவிக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை இன்றியமையா பண்டங்கள் சட்ட சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

கஞ்சா பதுக்கிய கணவன்-மனைவி

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே பூக்கொல்லை பகுதியில் உள்ள கருவேலமர காட்டிற்குள் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக நாகை போதைப்பொருள் நுண்ணரிவு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 9-ந் தேதி பூக்கொல்லை பகுதியில் உள்ள கருவேலமர காட்டிற்குள் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. உடனே அந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கஞ்சாவை பதுக்கி வைத்து இருந்தது யார்? என போலீசார் விசாரணை நடத்தியபோது, பூக்கொல்லை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த செல்வராஜ் (வயது65), இவருடைய மனைவி மங்களம் (52) ஆகியோர் தனது வீட்டின் பின்புறம் உள்ள கருவேலமர காட்டிற்குள் கஞ்சாவை பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது.

தலா 5 ஆண்டுகள் சிறை

இதையடுத்து கணவன், மனைவி இருவரையும் போலீசார் கைது செய்து தஞ்சை இன்றியமையா பண்டங்கள் சட்ட சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி (பொறுப்பு) சுந்தர்ராஜன் விசாரணை செய்து செல்வராஜ், மங்களம் ஆகிய 2 பேருக்கும் தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ரஞ்சித் ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்