பள்ளி இலவச சீருடைகளை தைக்க 5 சதவீத கூலி உயர்வு
பள்ளி இலவச சீருடைகளை தைக்க 5 சதவீத கூலி உயர்வு வழங்க வேண்டும் என்று தையல் தொழிலாளர்கள் கோரிக்கைவிடுத்தனர்.
திண்டுக்கல் மாவட்ட தையல் தொழிலாளர் சங்கத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமையில் தையல் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மாணிக்கம், செயலாளர் குணசீலன், பொருளாளர் ஆரோக்கியமேரி உள்ளிட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், தமிழகத்தில் 79 மகளிர் தையல் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கும் இலவச சீருடை தைக்கும் வேலையில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். இவர்களின் நலன்கருதி இலவச பள்ளி சீருடை தைக்க ஆண்டு தோறும் 5 சதவீதம் கூலியை உயர்த்த வேண்டும். கூட்டுறவு தையல் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி வழங்க வேண்டும்.
மேலும் ஆண்டு முழுவதும் தையல் வேலை கிடைக்கும் வகையில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும் சீருடை வழங்க வேண்டும். சீருடை தைக்கும் கூலியை பாக்கி இல்லாமல் உடனுக்குடன் வழங்க வேண்டும். அதேபோல் சீருடைகளை தைக்க இலவச மின்சாரம் வழங்குவதோடு, பஸ்சில் துணிகளை கொண்டு செல்ல கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும். இலவசமாக தையல் எந்திரம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.