பஸ் ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு - தொழிற்சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு

பஸ் ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படும் என தொழிற்சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-08-25 00:11 GMT

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை

தமிழக அரசு அனைத்து போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான (பஸ் ஊழியர்கள்) 14-வது ஊதிய ஒப்பந்தத்தின் 7-ம் கட்டத்தின் 2-ம் நாள் பேச்சுவார்த்தை, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சென்னை குரோம்பேட்டையில் நேற்று நடந்தது.

இதில் முதன்மை செயலாளர் கோபால், நிதித்துறை கூடுதல் செயலாளர் அருண் சுந்தர் தயாளன், தொழிலாளர் துறை தனி இணை கமிஷனர் லட்சுமிகாந்தன் மற்றும் பதிவு செய்யப்பட்ட 66 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

5 சதவீத உயர்வு

பின்னர் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் உத்தரவுப்படி, 14-வது ஊதிய ஒப்பந்த 7-ம் கட்ட பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கங்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, சில கோரிக்கைகள் இன்று (நேற்று) முடிவு செய்யப்பட்டு ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

அரசு போக்குவரத்துகழகங்களில் பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்களுக்கு அடிப்படை ஊதியம் 2019-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி முதல் நிர்ணயம் செய்யப்படும். 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந்தேதி அன்று அவர்கள் பெற்றுவந்த அடிப்படை ஊதியத்தை 5 சதவீதம் உயர்வு அளித்து கணக்கீடு செய்து புதிய அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்யப்படுகிறது.

குறைந்தபட்ச ஊதிய உயர்வு பலன் ரூ.1,000 ஆக வழங்கப்படும். மகளிர் இலவச பஸ்களில் பணியாற்றும் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு வசூல் பேட்டா இரட்டிப்பாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. பணியாளர்களுக்கான படிகளும் தொழிற்சங்கங்களின் கோரிக்கையின்படி உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் ஒரே வழிகாட்டுதலுக்கான நிலையாணையை நடைமுறைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளது.

4 ஆண்டுகள் ஒப்பந்தம்

குடும்ப நல நிதியும், ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. ஓய்வுதாரர் அவருடைய துணைவியருக்கும், இறந்த தொழிலாளர்களின் துணைவியருக்கும் இலவச பயண அட்டை தொடர்ந்து வழங்கப்படும். கொரோனா காலத்தில் பணிபுரிந்த அனைத்து பணியாளர்களுக்கும் சிறப்பு ஊதியமாக ரூ.300 வழங்கப்பட உள்ளது. சீருடையுடன் தையல் கூலியும் உயர்த்தி வழங்கப்படுகிறது.

கடந்த 2011 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் 21 நாட்கள் நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்று பணிக்கு வராதவர்களுக்கு, பணிக்கு வராத காலங்கள் பணி தொடர்ச்சிக்கு எடுத்துக்கொண்டு ஆய்வு பலன் வழங்கப்படுவதுடன், ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் கைவிடப்படுகின்றன.

இந்த ஒப்பந்தம் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதியில் இருந்து, 2023-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந்தேதி வரை 4 ஆண்டுகளுக்கு சட்டப்படியாக செயல்பாட்டில் இருக்கும். ஒப்பந்தத்தில் பெரும்பாலான சங்கங்கள் கையெழுத்திட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.2,200 முதல் ரூ.4,500 வரை

இதுகுறித்து தொ.மு.ச. பேரவை தலைவர் சண்முகம் எம்.பி. எச்.எம்.எஸ். சங்க தலைவர் சுப்பிரமணிய பிள்ளை ஆகியோர் கூட்டாக கூறும்போது, 'போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட நிலையில் பணியாளர்களுக்கு குறைந்த பட்சம் ரூ.2,200-ல் இருந்து ரூ.4,500 வரை ஊதிய உயர்வு கிடைக்கும்' என்றார்.

சி.ஐ.டி.யு. தலைவர் சவுந்தரராஜன் கூறும்போது, 'ஒப்பந்தத்தில் தாங்கள் விடுத்த பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஊதிய உயர்வு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இதனை கண்டித்து நாளை (இன்று) மாநிலம் முழுவதும் 300 பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்' என்றார்.

அண்ணா தொழிற்சங்க தலைவர் கமலகண்ணன் கூறும் போது, எங்கள் தொழிற்சங்கம் விடுத்த எந்த கோரிக்கையையும் நிறைவேற்றாததால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்