சொத்து வரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை

கோவையில் 2 நாட்கள் வரி வசூல் சிறப்பு முகாம் நடத்தப்படுவதுடன், சொத்து வரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்து உள்ளார்.

Update: 2023-10-06 20:15 GMT

கோவையில் 2 நாட்கள் வரி வசூல் சிறப்பு முகாம் நடத்தப்படுவதுடன், சொத்து வரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்து உள்ளார்.

சொத்து வரி

கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

2023-24-ம் நிதியாண்டில் 2-வது அரை ஆண்டுக்கான சொத்து வரியை வருகிற 31-ந் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும். இதை கருத்தில் கொண்டு மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் கடை வாடகைகளை செலுத்த வேண்டும்.

இதற்கு வசதியாக இன்று(சனிக்கிழமை), நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் வரி வசூல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 56 மற்றும் 57-வது வார்டுகளுக்கு ஒண்டிபுதூர் நெசவாளர் காலனி சுங்கம் மைதானத்தில் 2 நாட்களும், மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 34-வது வார்டுக்கு மஞ்சீஸ்வரி காலனி விநாயகர் கோவில் வளாகத்தில் நாளை மட்டும் முகாம் நடத்தப்படும்.

சிறப்பு முகாம்கள்

39-வது வார்டு சுண்டப்பாளையம் பெருமாள் கோவில் வளாகத்தில் இன்றும், 75-வது வார்டு சீரநாயக்கன்பாளையம் நேதாஜி சாலை மாரியம்மன் கோவில் வளாகத்தில் 2 நாட்களும் வரி வசூல் முகாம் நடைபெறும். தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 93-வது வார்டு சர்ச் வீதி மாநகராட்சி சமுதாய கூடத்தில் மற்றும் 99-வது வார்டு ஸ்ரீராம் நகர் 6-வது வீதியில் 2 நாட்கள் முகாம்கள் நடைபெறுகிறது.

வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 11-வது வார்டு ஜனதா நகர் ஆரம்ப பள்ளியிலும், 28-வது வார்டு இளங்கோ நகரில் மாநகராட்சி வார்டு அலுவலகத்திலும், 25-வது வார்டு காந்திமாநகர் அரசு உயர்நிலைப்பள்ளியிலும் 2 நாட்கள் முகாம்கள் நடத்தப்படுகிறது.

மாலை 5 மணி வரை...

மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 32-வது வார்டு நாராயணசாமி வீதியிலும், 63-வது வார்டுபெருமாள் கோவில் வீதியிலும், 80-வது வார்டு கெம்பட்டி காலனி மாநகராட்சி ஆரம்ப பள்ளியிலும் 2 நாட்கள் முகாம்கள் நடைபெறும்.

இந்த முகாம்கள் மற்றும் மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். இதை பயன்படுத்தி பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகள் மற்றும் கட்டணங்களை செலுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்