பெண் குரலில் பேசி வாலிபரிடம் வழிப்பறி செய்த 5 பேர் கைது
பெண் குரலில் பேசி மயக்கி வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
நொய்யல்,
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் சந்தைப்பேட்டை தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 30). இவரது செல்போனில் தொடர்பு கொண்ட இளம்பெண் ஒருவர் ஆசை வார்த்தைகளை கூறி பேசியுள்ளார். பின்னர் சதீஷ்குமாரை கரூர் மாவட்டம் புகழூர் அருகே தட்டங்காடு பகுதியில் உள்ள தைலத்தோப்பு பகுதிக்கு வருமாறு கூறியுள்ளார்.
அந்த பெண்ணின் குரலில் மயங்கிய சதீஷ்குமார் தட்டங்காடு தைலத்தோப்புக்கு தனியாக சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்து நின்று கொண்டிருந்த 5 வாலிபர்கள் திடீரென சதீஷ்குமாரை பிடித்து அவர் கையில் அணிந்திருந்த வெள்ளி சங்கிலியையும், விலை உயர்ந்த செல்போனையும் பறித்துக் கொண்டு சதீஷ்குமாரை அங்கிருந்து விரட்டி அடித்து அனுப்பியுள்ளனர்.
5 பேர் கைது
இதனால் அதிர்ச்சி அடைந்த சதீஷ்குமார் இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வினோதினி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். இதில், சதீஷ்குமாரை பெண் குரலில் பேசி வரவழைத்தது புகழூர் ஹைஸ்கூல் மேடு பகுதியை சேர்ந்த மோகன் மகன் சரவணன் (20), அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் மகன் சூர்யா (21), குமார் மகன் விஜய் (19), நாமக்கல் மாரியம்மன் கோவில் அண்ணா நகரில் வசித்து வரும் தனபாண்டியன் மகன் கார்த்திகேயன் (19), தளவாபாளையம் அருகே கிழக்கு தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் மகன் ரூபன் (21) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.