கொள்ளை போனதாக நாடகமாடிய நகைக்கடை மேலாளர் உள்பட 5 பேர் கைது

காரில் வைத்திருந்த நகைகள் கொள்ளை போனதாக நாடகமாடிய நகைக்கடை மேலாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-07 21:18 GMT

காரில் வைத்திருந்த நகைகள் கொள்ளை போனதாக நாடகமாடிய நகைக்கடை மேலாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

நகைக்கடை அதிபர்

தேனியை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 54). இவர், அந்த பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் விற்பனை செய்யும் நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பதிப்பதற்காக 87 பவுன் நகைகளுடன் மதுரைக்கு காரில் வந்தார்.

அவருடன் நகைக்கடை மேலாளர் சாய்பு(50), கார் டிரைவர் ராஜகோபால் ஆகியோரும் வந்தனர்‌.

இவர்கள், மதுரை அரசரடி பகுதியில் காரை நிறுத்திவிட்டு அந்த பகுதியில் உள்ள ஓட்டலில் சாப்பிட சென்றனர். பின்னர் வந்து பார்த்தபோது கார் கதவுகள் திறக்கப்பட்டு கிடந்தன. மேலும், காரில் வைத்திருந்த 87 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 லட்சத்து 25 ஆயிரம் ரொக்கம் ஆகியவை மாயமானதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

தனிப்படை

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில் உதவி கமிஷனர் ரவீந்திர பிரசாத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தினர். மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் கடை மேலாளரிடம் விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் கைப்பற்றியும் விசாரித்தனர்.

பறிமுதல்

காரில் இருந்த நகைகளை திருடி செல்லும் நபர்கள் பற்றிய காட்சி சிக்கியதால் விசாரணையை தீவிரப்படுத்தினர். நகைக்கடை விற்பனையாளர் வினோத்குமார்(30), முன்னாள் ஊழியர் சுப்புராஜ்(42) மற்றும் மருதுபாண்டி(20), இளையராஜா(27) ஆகியோருடன் சேர்ந்து நகை, பணத்தை மேலாளர் சாய்பு திருடிவிட்டு, கொள்ளை போனதாக நாடகம் ஆடியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த ரூ.31 லட்சத்து 39 ஆயிரத்து 245 மதிப்புள்ள நகைகள், ரூ.10 லட்சத்து 25 ஆயிரம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்