3 மாதங்களில் 4-வது முறையாக வெள்ளப்பெருக்கு

3 மாதங்களில் 4-வது முறையாக வெள்ளப்பெருக்கு

Update: 2022-09-09 19:32 GMT

அய்யம்பேட்டை

கொள்ளிடம் ஆற்றில் மூன்று மாதங்களில் 4-வது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தொழிலாளர்கள் வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர்.

வெள்ளப்பெருக்கு

தென்மேற்கு பருவமழை காரணமாக இந்த ஆண்டு கர்நாடகா, கேரள மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த ஜூலை மாதம் மத்தியிலும், ஆகஸ்டு மாத தொடக்கத்திலும், இறுதியிலும் என தொடர்ந்து மூன்று முறை கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கர்நாடக மாநிலத்தில் மீண்டும் பெய்த பலத்த மழையால் அந்த மாநில அணைகள் நிரம்பி அதிகளவு தண்ணீர் காவிரியாற்றில் திறந்து விடப்பட்டது. தற்போது மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைந்தாலும் தமிழகத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பவானி, அமராவதி ஆறுகளின் மழை நீரும், பல சிறிய ஆறுகளும் காவிரி ஆற்றில் கலக்கிறது. மேட்டூர் அணையில் திறக்கப்படும் உபரி நீர் மற்றும் மற்ற ஆறுகளின் மழைநீராலும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

4-வது முறையாக

இந்த தண்ணீரின் பெருமளவு முக்கொம்பிலிருந்தும், கல்லணையிலிருந்தும் கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படுகிறது. இதனால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் கொஞ்சம், கொஞ்சமாக வெள்ளப்பெருக்கு அதிகரிக்க தொடங்கியது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் மூன்று மாதத்தில் 4 -வது முறையாக தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆற்றின் கரையோர பகுதிகளான அணைக்குடி, வீரமாங்குடி, தேவன்குடி, பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடிக்காடு ஆகிய கிராமங்களில் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இப்பகுதியில் ஏராளமான வயல்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வாழ்வாதாரம் இன்றி தவிப்பு

அதேபோல இப்பகுதி தொழிலாளர்களும் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். எனவே இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், தொழிலாளர்களுக்கு அரசு சிறப்பு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றின் கரையோர வயல்களில் தற்போது நடவு செய்துள்ள குறுவை பயிர்களும், சில இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த முன்பட்ட குறுவை பயிர்களும் கொள்ளிடம் ஆற்றின் தண்ணீரில் மூழ்கி போயுள்ளது. மேலும் கரும்பு, வாழை பயிர்களையும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அதேபோல இப்பகுதி சேர்ந்த கூலி தொழிலாளர்கள் விவசாய பணிகளும், செங்கல் சூளைகளிலும் வேலை பார்த்து வந்தனர். தற்போதைய கொள்ளிடம் ஆற்றில் வெள்ள பெருக்கால் இவர்களும் வாழ்வாதாரம் இன்றி வீட்டிலேயே முடங்கி போயுள்ளனர். மூன்று மாதத்தில் 4 முறை ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் வாழ்வாதாரம் இழந்துள்ள கரையோர கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்