4,747 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின

4,747 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின

Update: 2022-11-12 18:45 GMT

திருவாரூர் மாவட்டத்தில் 4,747 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. வயல்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடு்பட்டு வருகின்றனர்.

தாளடி-சம்பா பயிர் சாகுபடி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை விட்டு விட்டு பெய்து வந்தது. பின்னர் 2 நாட்கள் மழை இல்லாமல் இருந்தது. இந்தநிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. அதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் மாவட்டத்தில் தாழ்வான இடங்களில் உள்ள நெல் வயல்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தாளடி நெற்பயிர் சாகுபடியும், 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியும் செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக கடந்த 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் பாதிப்பு குறித்து மாவட்ட வேளாண் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

4,747 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின

அதன்படி திருவாரூரில் 25 ஏக்கர், திருத்துறைப்பூண்டியில் 1,020 ஏக்கர், முத்துப்பேட்டையில் 712 ஏக்கர், மன்னார்குடியில் 350 ஏக்கர், நன்னிலத்தில் 1,085 ஏக்கர், நீடாமங்கலத்தில் 155 ஏக்கர், குடவாசலில் 725 ஏக்கர், வலங்கைமானில் 675 ஏக்கர் என மொத்தம் 4,747 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின.

இதனால் வயல்களில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மழை நீடித்தால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்படும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்