அரியலூர் மாவட்டத்தில் ரூ.13¾ கோடியில் 44 புதிய வளர்ச்சி திட்ட பணிகள்

அரியலூர் மாவட்டத்தில் ரூ.13¾ கோடியில் 44 புதிய வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

Update: 2023-08-10 19:18 GMT

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் மற்றும் அரியலூர் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறையின் சார்பில் ரூ.13¾ கோடி மதிப்பீட்டில் 44 புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா முன்னிலை வகித்தார். இதில் திருமானூர் ஒன்றியம், சாத்தமங்கலம் கிராமத்தில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.47 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பீட்டில் பி.எம்.ரோடு - சாத்தமங்கலம் வரை சாலை அமைக்கும் பணியினையும், வெற்றியூர் கிராமத்தில் ரூ.88 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பீட்டில் பி.எம்.ரோடு - வெற்றியூர் வரை சாலை அமைக்கும் பணியினையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, கீழக்கொளத்தூர், திருமானூர், சுள்ளங்குடி ஆகிய ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 18 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பீட்டில் தடுப்புசுவர் அமைத்தல், சிமெண்டு சாலை அமைத்தல், சிறுபாலம் கட்டுதல், கதிர் அடிக்கும் களம் அமைத்தல், தெருவிளக்கு அமைத்தல், அங்கன்வாடி கட்டிடம் கட்டுதல், கழிவுநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட 21 புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளையும், காமரசவல்லி கிராமத்தில் ரூ.24 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பஞ்சாயத்து அலுவலகத்தினையும் திறந்து வைத்து பார்வையிட்டார்.

பு.ஆதனூர் கிராமத்தில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட ஒரு வகுப்பறை கட்டிடத்தையும் திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர், பொய்யூர் கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறை நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.521 லட்சம் மதிப்பீட்டில் பொய்யூர் - செம்மந்தங்குடி சாலையை தரம் உயர்த்துதல் பணிகள் என மொத்தம் ரூ.13 கோடியே 84 லட்சம் மதிப்பீட்டில் 44 புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்து பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்