மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 401 மனுக்கள் பெறப்பட்டன
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 401 மனுக்கள் பெறப்பட்டன.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி, பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம், முதல்-அமைச்சரின் பசுமை வீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 401 பேர் மனுக்களை கொடுத்தனர். இம்மனுக்களை பெற்ற கலெக்டர் மோகன், இம்மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, திருவெண்ணெய்நல்லூர் தாலுகா அருங்குறுக்கை மதுரா புதூர் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவரின் 2 பெண் குழந்தைகள் ஏரியில் மூழ்கி உயிரிழந்ததற்காக அவரது குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.2 லட்சத்திற்கான காசோலையையும், நீதிமன்ற உத்தரவின்படி சமூகநலன் மற்றும் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் மூலம் 2 அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஆணையையும், சிறுமதுரையை சேர்ந்த ஜெயந்தி என்பவருக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவையும் கலெக்டர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் விஸ்வநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சிவா உள்பட பலர் கலந்துகொண்டனர்.