கருமந்துறையில் சரக்கு வாகனத்தில் 400 லிட்டர் சாராயம் பறிமுதல்

கருமந்துறையில் சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த 400 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2023-03-29 20:12 GMT

பெத்தநாயக்கன்பாளையம்:

ரகசிய தகவல்

சேலம் மாவட்டம் கருமந்துறை கல்வராயன் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சி வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க கருமந்துறை போலீசார் மலைப்பகுதியில் சோதனை நடத்தி சாராயம் காய்ச்சுபவர்களை கைது செய்தும், பறிமுதல் செய்த சாராய ஊறலை அழித்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் கருமந்துறை கல்லூர் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக கருமந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதிக்கு சென்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

பறிமுதல்

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் 10 லாரி டியூப்களில் 400 லிட்டர் சாராயம் காய்ச்சி விற்பனைக்காக கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த வெள்ளிமலை பகுதியை சேர்ந்த அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து பறிமுதல் செய்த சாராயத்தை அழிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்