ரவுடி கொலை வழக்கில் 4 வாலிபர்கள் திண்டிவனம் கோர்ட்டில் சரண்
சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற ரவுடி கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேர் திண்டிவனம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். உரிய ஆவணங்கள் இல்லாததால் அவர்கள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்
திண்டிவனம்
ரவுடி கொலை
சென்னை மயிலாப்பூர் பல்லக்குமாநகரை சேர்ந்தவர் டொகன்ராஜா(வயது 45). பிரபல ரவுடி சி.டி. மணியின் கூட்டாளியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி டொகன்ராஜா வீட்டை விட்டு வெளியே வந்தபோது, அவரை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது.
இது குறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
திண்டிவனம் கோர்ட்டில் சரண்
இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சென்னை ஆவடி, வேப்பம்பட்டு ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த முரளி மகன் சபரிநாத் (22), ரகு மகன் ராஜேஷ்(22), திருநின்றவூர் பகுதியை சேர்ந்த கணேஷ்பாபு மகன் மனோஜ் குமார்(21), துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த கதிரவன் மகன் நரேஷ்குமார்(23) ஆகிய 4 பேரும் திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் மாஜிஸ்திரேட்டு கமலா முன்பு சரண் அடைந்தனர்.
ஆனால் வாலிபர்கள் குறித்த ஆதார், புகைப்படம், முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாததால் மனுவை மாஜிஸ்திரேட்டு நிராகரித்ததை அடுத்து அவர்கள் 4 பேரும் திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
மயிலாப்பூர் அழைத்து சென்றனர்
பின்னர் இது குறித்து மயிலாப்பூர் போலீஸ் நிலையத்துக்கு திண்டிவனம் போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மயிலாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் திண்டிவனத்துக்கு விரைந்து வந்து 4 வாலிபர்களையும் சென்னை மயிலாப்பூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.