கோட்டக்குப்பம் அருகே மீன் வியாபாரத்துக்கு சென்றபோது விபத்துகார் மோதி ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பெண்கள் பலிஇளம்பெண்ணுடன் சுற்றுலா வந்த வாலிபர்கள் உள்பட 7 பேர் படுகாயம்

கோட்டக்குப்பம் அருகே மீன் வியாபாரத்துக்கு சென்றபோது கார் மோதி ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பெண்கள் பலியானார்கள். இளம்பெண்ணுடன் சுற்றுலா வந்த 4 வாலிபர்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-07-16 18:45 GMT


வானூர், 

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தை அடுத்த கீழ்புத்துப்பட்டு அருகே புதுகுப்பம் மீனவ கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த மீனவ பெண்கள், ஆட்டோவில் புதுச்சேரி மீன்பிடி துறைமுகத்துக்கு சென்று, மீன்வாங்கி வந்து, கூடையில் வைத்து வீதி வீதியாக விற்பனை செய்து வருகின்றனர்.

வழக்கம்போல் நேற்று அதிகாலை 5 மணியளவில் புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த மீன் வியாபாரிகளான லட்சுமி (வயது 45), கோவிந்தம்மாள் (50), நாயகம் (46), பிரேமா (48), கமலம் (49). கெங்கையம்மாள் (53) ஆகிய 6 பேர் புதுச்சேரி சென்று மீன் வாங்குவதற்காக கீழ்புத்துப்பட்டு பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையோரம் (இ.சி.ஆர்) ஆட்டோவுக்காக காத்திருந்தனர்.

4 பெண்கள் பலி

அப்போது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வேகமாக வந்த கார், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் காத்திருந்த மீனவ பெண்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. பின்னர் சாலையோரம் கவிழ்ந்தது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் மீன பெண்கள் லட்சுமி, கோவிந்தம்மாள் ஆகிய 2 பேரும் உடல்நசுங்கி அதே இடத்தில் துடிதுடித்து இறந்தனர். கெங்கையம்மாள், பிரேமா உள்பட மற்ற 4 பெண்களும் படுகாயம் அடைந்தனர். மேலும் காரில் வந்த ஒரு இளம்பெண், 4 வாலிபர்கள் காயம் அடைந்தனர்.

கார் மோதிய வேகத்தில் மீனவ பெண்கள் வைத்திருந்த கூடைகள் சாலையில் சிதறி கிடந்தன. விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் காயமடைந்த 9 பேரையும் மீட்டு புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் கெங்கையம்மாள், நாயகம் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்கள். மற்ற 7 பேர் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இளம்பெண்ணுடன் சுற்றுலா வந்த வாலிபர்கள்

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு நடத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் காரில் வந்தவர்கள் சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் (22), கோவிந்தன் (23), சேது (25), பிரசாந்த் (23) மற்றும் திரிஷா (22) என்பதும், நண்பர்களான இவர்கள் சென்னையில் இருந்து காரில் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்ததும் தெரியவந்தது.

காரை விக்னேஷ்வரன் ஓட்டிவந்த நிலையில், அதிகாலையில் தூக்க கலக்கத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நடந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கார் மோதிய விபத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் புதுக்குப்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்