திறந்தவெளியில் கிடந்த 4 டன் டயர்கள் பறிமுதல்

திண்டுக்கலில் திறந்தவெளியில் கிடந்த 4 டன் டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடைக்காரருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-10-19 00:00 GMT

திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள், மழைநீரில் எளிதில் உற்பத்தியாகின்றன. எனவே மழைநீர் தேங்குமாறு திறந்தவெளியில் டயர்களை போடக்கூடாது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதையும் மீறி திறந்தவெளியில் வைக்கப்படும் டயர்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட செல்லாண்டியம்மன் கோவில் தெரு பகுதியில் திறந்தவெளியில் டயர்கள் கிடப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில் நகர்நல அலுவலர் செபாஸ்டியன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், கேசவன் உள்ளிட்டோர் அங்கு விரைந்தனர்.

அங்கு பழைய டயர்கள் விற்பனை செய்யப்படும் ஒரு கடையில் திறந்தவெளியில் டயர்கள் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. மேலும் அதில் ஒருசில டயர்களில் மழைநீர் தேங்கி கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அங்கிருந்த 4 டன் பழைய டயர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில், மழைநீர் தேங்குமாறு டயர்களை வைத்து இருந்ததாக கடைக்காரருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்