4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

Update: 2023-06-15 18:45 GMT

பண்ருட்டி அருகே கீழக்குப்பத்தைச் சேர்ந்த சக்திவேல் (வயது 42) என்பவரை அதே பகுதியை சேர்ந்த ஞானகுரு (30), ராஜசேகர் (27) ஆகியோர் கட்டையால் தாக்கி கொலை செய்ததாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானகுரு, ராஜசேகர் ஆகிய 2 பேரையும் கைது செய்து கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.

இதேபோல் பண்ருட்டி அருகே மானடிக்குப்பத்தைச் சேர்ந்தவர் கலைமகன் (27). இவரை அவரது நண்பர்களான நெய்வேலி நகரை சேர்ந்த அகிலன் (23), தமிழரசன் (23) ஆகிய 2 பேரும் கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்றனர். இது குறித்த புகாரின் பேரில் அகிலன், தமிழரசன் ஆகிய 2 பேரையும் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.

குண்டர் தடுப்பு சட்டம்

இந்த நிலையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானகுரு, ராஜசேகர் மற்றும் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட அகிலன், தமிழரசன் ஆகியோரின் குற்றச்செயல்களை தடுக்கும்பொருட்டு அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பரிந்துரை செய்தார். இதையடுத்து ஞானகுரு உள்ளிட்ட 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அருண்தம்புராஜ் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து கடலூர் மத்திய சிறைச்சாலையில் இருக்கும் ஞானகுரு உள்ளிட்ட 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறைகாவலர்கள் மூலம் அவர்களுக்கு போலீசார் வழங்கினர். கடந்த 25 நாட்களுக்கு முன்பு பண்ருட்டி அடுத்த மருங்கூர் தச்சம்பாளையத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவரை கொலை செய்து அவரது நகையை பறித்து சென்றது தொடர்பாக 3 பேரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இதன் மூலம் ஒரு மாதத்தில் பண்ருட்டி பகுதியில் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

மேலும் செய்திகள்