அரசு ஊழியர் உள்பட 4 பேர் கைது

குளச்சல் அருகே வைத்தியரை தாக்கி நகை பறித்த வழக்கில் அரசு ஊழியர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-27 21:22 GMT

குளச்சல்:

குளச்சல் அருகே வைத்தியரை தாக்கி நகை பறித்த வழக்கில் அரசு ஊழியர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

வைத்தியரிடம் நகை பறிப்பு

குளச்சல் அருகே பெத்தேல்புரம் படுவாக்கரையை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 71). இவர் செம்பொன்விளை-திக்கணங்கோடு மெயின்ரோட்டில் நாட்டு மருத்துவ வைத்தியசாலை நடத்தி வருகிறார். கடந்த 24-ந் தேதி மாலை இவர் நோயாளி ஒருவரை பார்த்து விட்டு வைத்தியசாலையில் கையை கழுவிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென ஜார்ஜை கீழே தள்ளி விட்டு கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்து விட்டு வெளியே ஓடினார். உடனே வைத்தியர் ஜார்ஜ் திருடன், திருடன் என சத்தம் போட்டபடி பின்னாலேயே ஓடினார்.

போலீஸ் விசாரணை

வைத்தியசாலையின் வெளியே ஏற்கனவே 2 பேர் மோட்டார் சைக்கிளில் தயாராக நின்றனர். அந்த நபர்களுடன் மோட்டார் சைக்கிளில் ஏறி நகைைய பறித்தவர் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி விட்டார்.

இதுகுறித்து ஜார்ஜ் குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் சம்பவம் நடந்த பகுதியில் பதிவாகியிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.

இந்தநிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி மற்றும் தனிப்படையினர் இரணியல் அருகே கொடுப்பைக்குழி பகுதியில் ரோந்து சென்ற போது சந்தேகத்திற்கிடமாக 4 பேர் நின்று கொண்டிருந்தனர். அந்த கும்பல் போலீசாரை கண்டதும் தப்பிஓட முயற்சித்தது.

4 பேர் கைது

உடனே போலீசார் 4 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நட்டாலம் பொற்றைவிளையை சேர்ந்த அபிஷேக் (22), சாந்தபுரத்தை சேர்ந்த சுபின் (19), மேற்கு கொடுப்பைக்குழியை சேர்ந்த கார்த்திக் என்ற ஜோதி (29) மற்றும் சிவசங்கு (53) என்பதும், வைத்தியரை தாக்கி நகை பறித்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்ற தகவலும் வெளிவந்தது. இதில் அபிஷேக் ராஜாக்கமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் .

மேலும் இந்த நகை பறிப்பில் முக்கியமான நபராக மேற்கு கொடுப்பைக்குழியை சேர்ந்த சிவா (27) என்பவர் இருப்பது தெரியவந்தது. அவர் தான் வைத்தியரை தாக்கி நகை பறித்தவர். தற்போது தலைமறைவாக உள்ளார். இவருக்கு துணையாக அபிஷேக், சுபின் ஆகிய 2 பேரும் துணையாக வந்துள்ளனர். கார்த்திக் என்ற ஜோதி மற்றும் சிவசங்கு ஆகிய 2 பேர் வைத்தியரிடம் நகை பறிக்க திட்டம் வகுத்து கொடுத்தவர்கள் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து 4 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சிவாவை தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்