தமிழகத்தில் மேலும் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மேலும் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.;
சென்னை,
தமிழகத்தில் கோடை மழை பெய்து வருகிறது. பல இடங்களில் இடி மின்னலுடன் மழையும் பெய்கிறது. அந்த வகையில் நேற்றும் தமிழகத்தின் அனேக இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்தது. குறிப்பாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதுதவிர தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
இந்தநிலையில் 7-ந்தேதி வரை தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மேலும் 4 நாட்களுக்கு...
தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதாலும், வட தமிழகத்தில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் (வியாழன், வெள்ளிக்கிழமைகளில்) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 6, 7-ந்தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேவேளை 5-ந்தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும். அதாவது 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
தென்கிழக்கு வங்க கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே 6-ந்தேதி மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். அதேபோல 7-ந்தேதி, தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
அதிகபட்ச மழை
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்கோனாவில் அதிகபட்சமாக 11 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. கடம்பூர், கழுகுமலையில் தலா 10 செ.மீ. மழையும், எலந்தகுட்டை, மணியாச்சி, மூலைக்கரைப்பட்டி, தாளவாடியில் தலா 9 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
புயல் உருவாக வாய்ப்பு
வங்க கடலில் புதிய புயல் உருவாக வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகிற 6-ந்தேதி, தென்கிழக்கு வங்க கடலில் வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்பு இருக்கிறது. அதன் காரணமாக, 7-ந்தேதி அதே பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது. வருகிற 8-ந்தேதி, அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவும், பின்னர் புயலாக வலுப்பெறவும் வாய்ப்பு உள்ளது.
புயல் உருவான பின்பு, அந்த புயலானது மத்திய வங்க கடல் பகுதியை நோக்கி நகரவும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தற்போது உருவாகவுள்ள புயலானது மத்திய வங்க கடல் பகுதியை நோக்கி நகர வாய்ப்பிருக்கும் என்பதால் தமிழக நிலப்பரப்பில் இருக்கும் காற்றானது கடல்பரப்புக்கு செல்லும் என்பதால், தமிழகத்தில் வெயிலின் தாக்கமும், தரைக்காற்றின் வெப்பநிலையும் அதிகரிக்கும் என வானிலை ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.