4 பேர் கைது

வல்லத்தில் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-13 21:02 GMT

வல்லத்தில் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தனிப்படை அமைப்பு

தஞ்சை அருகே கடந்த 8-ந்தேதி இரவு கள்ளப்பெரம்பூர் களிமேடு கிராமத்தில் உள்ள விடுதலை நகர் பகுதியில் தனியாக வசித்து வந்த கணவன்- மனைவியை கட்டிப்போட்டு கத்தியை காட்டி மிரட்டி

நகைகள் மற்றும் செல்போன் ஆகியவற்றை 4 பேர் கொண்ட கொள்ளையர்கள் பறித்து சென்றனர். இதில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா உத்தரவின் பேரில்

சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய் அமல்தாஸ், அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சாமிநாதன், சிவபாதசேகர், மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

வாகன சோதனை

நேற்று கள்ளப்பெரம்பூர் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் தனிப்படை போலீசார் திருவையாறு - தஞ்சை பைபாஸ் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வடவாறு பாலம் அருகே வாகனங்களில் வந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், தஞ்சை விளார் பகுதியை சேர்ந்த மாணிக்கம், தஞ்சை அருகே உள்ள காசவளநாடு புதூர் கிராமத்தை சேர்ந்த பாலகுமார், அவரது தம்பி அருண்குமார், சக்கரசாமந்தம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் ஆகியோர் என்பது தெரியவந்தது.

4 பேர் கைது

அவர்கள் மேலவெளி பகுதியில் கணவன்-மனைவியை கட்டி போட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றதும், தஞ்சை சிங்கபெருமாள்குளம் அருகில் வீட்டின் கதவை உடைத்து வெள்ளி பொருட்களையும், வீட்டிற்கு வெளியில் நின்ற மோட்டார்சைக்கிளையும் எடுத்து சென்றது தெரியவந்தது. அதேபோல் தஞ்சை, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதுகுறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமார் (31), மாணிக்கம் (23), அருண்குமார் (25), பாலகுமார் (31) ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து கொள்ளையடித்த நகைகள், பொருட்கள், மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்