ஊரக திறனாய்வு தேர்வை 3,831 மாணவ-மாணவிகள் எழுதினர்

ஊரக திறனாய்வு தேர்வை 3,831 மாணவ-மாணவிகள் எழுதினர்.

Update: 2022-12-17 18:26 GMT

9-ம் வகுப்பு பயிலும்...

தமிழகத்தில் ஊரக பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை பெற ஊரக திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வை எழுத பெரம்பலூர் மாவட்டத்தில் 848 மாணவர்களும், 1,110 மாணவிகளும் என மொத்தம் 1,958 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் 899 மாணவர்களும், 1,081 மாணவிகளும் என மொத்தம் 1,980 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்தனர்.

இந்த தேர்வானது பெரம்பலூர் மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 11 மையங்களிலும் நேற்று நடந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 12.30 மணிக்கு முடிவடைந்தது. ஒரே வார்த்தையிலான விடையை தேர்வு செய்து, அதனை ஓ.எம்.ஆர். விடைத்தாளில் 'ஷேட்' செய்யும் வகையில் தேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆய்வு

இந்த தேர்வினை அந்தந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 816 மாணவர்களும், 1,095 மாணவிகளும் என மொத்தம் 1,911 பேர் பங்கேற்று தேர்வினை ஆர்வத்துடன் எழுதினர். 31 மாணவர்களும், 16 மாணவிகளும் என மொத்தம் 47 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் 855 மாணவர்களும், 1,065 மாணவிகளும் என மொத்தம் 1,920 பேர் பங்கேற்று தேர்வை ஆர்வத்துடன் எழுதினர். 44 மாணவர்களும், 16 மாணவிகளும் என மொத்தம் 60 பேர் தேர்வுக்கு வரவில்லை.

இந்த தேர்வில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல், மன திறன் கல்வி ஆகியவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இந்த தேர்வில் மாவட்டத்தில் அதிக மதிப்பெண்கள் பெறும் முதல் 50 மாணவர்களுக்கும், 50 மாணவிகளுக்கும் 9 முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி உதவித்தொகை தமிழக அரசால் வழங்கப்படவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்