தமிழகத்தில் 38 லட்சம் வாக்காளர்கள் ஆதார் எண்களை வாக்காளர் அடையாள அட்டையில் இணைக்க பதிவு செய்துள்ளனர் - சத்யபிரதா சாகு

தமிழகத்தில் 38 லட்சம் வாக்காளர்கள் ஆதார் எண்களை வாக்காளர் அடையாள அட்டையில் இணைக்க பதிவு செய்துள்ளதாக தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-19 09:55 GMT

சென்னை,

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி இம்மாதம் துவங்கியது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களின் ஆதார் எண்களை சேகரித்து வருகின்றனர்.

இந்தப்பணி 2023 மார்ச் 31 வரை நடக்க உள்ளது. ஓட்டுச்சாவடி அலுவலரிடம் ஆதார் எண் வழங்க முடியாதவர்கள் www.nvsp.in என்ற இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்யலாம். இது தவிர 'Voter Help Line' எனும் செயலி வழியாகவும் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறுகையில்,

தமிழகம் முழுதும் இதுவரை 37 லட்சத்து 81 ஆயிரத்து 498 பேர் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் சேர்க்க பதிவு செய்துள்ளனர். இது 6.08 சதவீத அளவு. இவர்களில் 90 சதவீதம் பேர் ஓட்டுச்சாவடி அலுவலர் வழியாக பதிவு செய்துள்ளனர். மீதம் 10 சதவீதம் பேர் ஆன்லைன் மற்றும் செயலி வழியாக பதிவு செய்துள்ளனர் எனத் தெரிவித்தார்.

அதிகபட்சமாக அரியலுார், பெரம்பலுார், விருதுநகர் மாவட்டங்களில் 20 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் ஆதார் எண்களை வழங்கி உள்ளனர். வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறோம்.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நவம்பரில் நடக்க உள்ளது. அப்போது சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். சிறப்பு முகாமில் ஆதார் எண் பெற படிவங்கள் வழங்கப்படும். அப்போது அதிகம் பேர் வழங்குவர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

Tags:    

மேலும் செய்திகள்