நடுக்கடலில் சிக்கிய நாகை மீனவர்கள் 34 பேர் மீட்பு

ஒடிசாவில் புயல் சின்னம் காரணமாக கடல் கொந்தளிப்பால் நடுக்கடலில் சிக்கிய நாகை மீனவர்கள் 34 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Update: 2023-07-29 08:09 GMT

காசிமேடு, 

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ஞானபாண்டியன், சாமிநாதன் உள்பட 34 மீனவர்கள் 2 விசைப்படகில் நாகப்பட்டினத்தில் இருந்து கடந்த 8-ந் தேதி கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். 25-ந் தேதி 40 நாட்டிக்கல் தாண்டி கடலுக்குள் மீன் பிடித்துகொண்டிருந்தபோது ஒடிசாவில் புயல் சின்னம் காரணமாக கடல் கொந்தளித்து, அதிக நீர் ஓட்டத்தாலும் பலத்த காற்று வீசியதாலும் வலைகள் விசைப்படகு என்ஜினில் சிக்கிகொண்டது. இதனால் மீனவர்கள் நடுக்கடலில் சிக்கி கொண்டனர். அவர்களால் தொடர்ந்து விசைப்படகை இயக்க முடியவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு சென்ற கடற்படையினர் 2 விசைப்படகுகளையும், அதில் சிக்கி தவித்த 34 மீனவர்களையும் கடலோர காவல் படையினர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உதவியுடன் மீட்டு சென்னை காசிமேடு துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர். காசிமேடு துறைமுகத்துக்கு திரும்பிய 34 மீனவர்களுக்கும் மீன்வள துறை உதவி இயக்குனர் அஜய் ஆனந்த் தலைமையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, நாகப்பட்டினத்துக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்