3,309 டன் விளைபொருட்கள் ரூ.6 கோடிக்கு பரிவர்த்தனை

தேனி மாவட்டத்தில் தேசிய வேளாண் சந்தை மூலம் 3,309 டன் விளைபொருட்கள் ரூ.6 கோடிக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-06-05 15:02 GMT

தேசிய வர்த்தக சந்தை

மத்திய அரசு மூலம் இந்தியா முழுவதும் ஒரே உரிமம், ஒரே வணிகம், ஒரே வணிக சந்தை என்ற நோக்கில் மின்னணு தேசிய வர்த்தக சந்தை திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில், இந்தியா முழுவதும் 585 வேளாண் சந்தைகள் மின்னணு முறையில் இணைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் முதல் கட்டமாக 23 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் தேர்வு செய்யப்பட்டதில், தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடமும் ஒன்று. இந்த விற்பனைக்கூடம் கடந்த 2017-ம் ஆண்டு தேசிய வேளாண் சந்தையுடன் இணைக்கப்பட்டு, மின்னணு வர்த்தகம் நடந்து வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த வேளாண் விளைபொருட்களை அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்யவும், வியாபாரிகள் விளைபொருட்களின் தரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்வதால் விவசாயிகளுக்கு உள்ளூர் விலையைவிட கூடுதல் வருவாய் கிடைக்கவும் வழிவகை ஏற்படுகிறது.

மின்னணு பரிவர்த்தனை

அந்த வகையில் கம்பம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேசிய வேளாண் சந்தைகள் மூலம் மின்னணு வர்த்தகத்தில் தற்போது வரை 2,958 டன் வேளாண் விளைபொருட்கள் ரூ.5 கோடியே 7 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இதில் 1276.35 டன் வேளாண் பொருட்கள் ரூ.2 கோடியே 17 லட்சம் மதிப்பில் பணப்பரிவர்த்தனையாகவும், 1681.65 டன் வேளாண் விளைபொருட்கள் ரூ.2 கோடியே 90 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் மின்னணு பரிவர்த்தனை மூலமும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் 495 விவசாயிகள் பயனடைந்தனர்.

அதுபோல், 2020-21-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் மேலும் 40 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மின்னணு தேசிய வேளாண் சந்தையுடன் இணைக்கப்பட்டது. அதில், தேனி மாவட்டத்தில் 2-வது தேசிய வேளாண் சந்தையாக தேனி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் தேர்வு செய்யப்பட்டு இணைக்கப்பட்டது.

3,309 டன்

இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இதுவரை 351 டன் வேளாண் விளைபொருட்கள் ரூ.99 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பில் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. அதில், ரூ.3 லட்சத்து 87 ஆயிரம் பணப்பரிவர்த்தனையாகவும், ரூ.95 லட்சத்து 82 ஆயிரம் மின்னணு பணப்பரிவர்த்தனை மூலமும் விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டது. இதன் மூலம் 105 விவசாயிகள் பயன்பெற்றனர்.

இந்த திட்டத்தின் கீழ் கம்பம், தேனி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் மொத்தம் 3,309 டன் வேளாண் விளைபொருட்கள் ரூ.6 கோடியே 7 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 600 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். இத்தகவலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்