தங்கச்சிமடத்தில் 31-ந்தேதி கடையடைப்பு, உண்ணாவிரதம்
மின்வாரியத்துறையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தங்கச்சிமடத்தில் வருகிற 31-ந்தேதி கடையடைப்பு, உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது என்று வர்த்தக சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.
ராமேசுவரம்,
மின்வாரியத்துறையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தங்கச்சிமடத்தில் வருகிற 31-ந்தேதி கடையடைப்பு, உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது என்று வர்த்தக சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.
ஆலோசனை கூட்டம்
தங்கச்சி மடத்தில் வர்த்தக சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வர்த்தக சங்க தலைவர் நிஜாமுதீன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சங்க செயலாளர் வல்லப கணேசன், பொருளாளர் முகைதீன் பக்கீர், துணைத்தலைவர் முருகேசன், இணைச் செயலாளர் ரமேஷ், துணைச்செயலாளர் ராஜேஷ், சட்ட ஆலோசகர் கார்த்திகை ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தங்கச்சிமடம் பகுதிக்கு மின்வாரியத்துறை சார்ந்த நிரந்தர பணியாளர்கள் பற்றாக்குறை இல்லாமல் நியமிக்க வேண்டும். மின்வாரிய பணியாளர்களின் பெயர்கள் மற்றும் செல்போன் எண்கள் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் தங்கச்சிமடம் பகுதியில் பொது இடங்களில் எழுதி வைக்க வேண்டும். தங்கச்சிமடம் பகுதியில் குறைந்த மின்னழுத்தம் இருந்து வருவதால் வீடுகளில் உள்ள பிரிட்ஜ், ஏ.சி, டிவி உள்ளிட்ட மின் சாதனபொருட்கள் பழுதாகி வருகின்றன. அதனால் இந்த குறைந்த மின்னழுத்தத்தை சரி செய்யும் பொருட்டு புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னறிவிப்பின்றி ஏற்படும் மின்தடையை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் கணக்கீட்டாளர்கள் உரிய நேரத்தில் மின் கணக்கீடு வீடுகளில் பதிவு செய்ய வேண்டும்.
கடையடைப்பு
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 31-ந் தேதி அன்று தங்கச்சிமடம் பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைத்து ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுபோல் இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவும் பதிவு தபால் மூலமும் மாவட்ட கலெக்டர் மற்றும் ராமநாதபுரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.