குறைதீர்க்கும் கூட்டத்தில் 308 பேர் மனு
குறைதீர்க்கும் கூட்டத்தில் 308 பேர் மனு அளித்தனர். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
கோவை
குறைதீர்க்கும் கூட்டத்தில் 308 பேர் மனு அளித்தனர். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
குறைதீர்ப்பு கூட்டம்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொது மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கிராந்தி குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர்.
கூட்டத்தில் இலவச வீடு வேண்டி 60 மனு, வீட்டுமனை பட்டா கேட்டு 98 மனு, வேலைவாய்ப்பு கோரி 11 மனு, 139 இதர மனு என மொத்தம் 308 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
கடந்த வாரம் 353 மனுக்கள் வந்தது குறிப்பிடத்தக்கது. அதை இந்த வாரம் குறைந்த மனுக்களே அளிக்கப்பட்டதால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பு இன்றி காணப்பட்டது.
ரூ.1 லட்சம் நிவாரண நிதி
இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் செல்வன் பிரபின் என்ற மாணவருக்கு இளங்கலை பொறியியல் பட்டப்படிப்பு படிக்க ரூ.50 ஆயிரம் நிதி உதவிக்கான காசோலை, மின்சாரம் தாக்கி உயிரிழந்த குனியமுத்தூரை சேர்ந்த சுலைமான் என்பவரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் கிராந்திகுமார் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, தனி சப்- கலெக்டர் சுரேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஷபிஅகமது, மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீஷன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.