முத்துப்பேட்டையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 300 கிலோ கஞ்சா பறிமுதல்
முத்துப்பேட்டையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த கியூ பிராஞ்ச் போலீசார், இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த கியூ பிராஞ்ச் போலீசார், இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.
அதிரடி சோதனை
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அலையாத்திக்காடு வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக தஞ்சை கியூ பிராஞ்ச் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து தஞ்சை கியூ பிராஞ்ச் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசங்கர் தலைமையில் நாகை இன்ஸ்பெக்டர் ராமச்சந்திர பூபதி, திருவாரூர் சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் ஆகியோர் அடங்கிய போலீசார் படகு மூலம் சென்று முத்துப்பேட்டை அலையாத்தி காட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி
அப்போது அங்குள்ள லகூன் திட்டு பகுதியில் 3 பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் படகுடன் இருப்பதை கண்டு போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது அந்த படகில் 10 மூட்டைகளில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகானந்தம்(வயது 43), அதே பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் மகன் மகேந்திரன்(29), கோவிலூர் மெயின் ரோட்டை சேர்ந்த மாரிமுத்து மகன் சசிகுமார்(20) ஆகியோர் என்பதும், இவர்கள் 3 பேரும் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கஞ்சா மூட்டைகளை இலங்கைக்கு கடத்த இருந்ததும் தெரிய வந்தது.
300 கிலோ பறிமுதல்
இதனையடுத்து பிடிபட்டவர்களிடம் இருந்து 300 கிலோ கஞ்சா, 35 குளியல் சோப்புகள், ஒரு ஜி.பி.ஆர்.எஸ். கருவி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய படகு ஆகியவற்றை கியூ பிராஞ்ச் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் பிடிபட்ட 3 பேரையும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் இதர பொருட்களையும் முத்துப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதனைத்தொடர்ந்து முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
மேலும் சிலருக்கு வலைவீச்சு
கைதான 3 பேரிடமும் முத்துப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார், இந்த கடத்தலில் தொடர்புடைய மதுக்கூர் மற்றும் அத்திவெட்டி பகுதியை சேர்ந்த மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
ரூ.10 லட்சம் மதிப்பு
பறிமுதல் செய்யப்பட்ட 300 கிலோ கஞ்சாவின் இன்றைய சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த கடத்தல் சம்பவம் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.