300 ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளநீரில் மூழ்கின
300 ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளநீரில் மூழ்கின.
துறையூர்:
பலத்த மழை
திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட அம்மம்பாளையத்தில் வரையாற்று அருவி உள்ளது. இந்த ஆறு மருவத்தூர் வழியாக செல்லிபாளையத்திற்கு சென்று அங்குள்ள குண்டாற்றில் கலக்கிறது. பச்சமலை பகுதியில் பலத்த மழை பெய்யும் சமயங்களில் வரையாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படும். தற்போது கடந்த சில மாதங்களாகவே வரையாற்றில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் துறையூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை நேரத்தில் திடீரென்று மழை பெய்ய தொடங்கி, சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதில் பச்சமலையில் அதிக அளவில் மழை பெய்துள்ளது.
விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின
இதனால் பச்சமலையில் இருந்து வந்த நீரால் வரையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டதால் அம்மம்பாளையம், மருவத்தூர், செல்லிபாளையம் பகுதிகளில் உள்ள சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின.
மேலும் வரையாற்றுக்கு செல்லும் சாலையில் அம்மம்பாளையத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் செல்வதால், அப்பகுதி ஆறுபோல் மாறி உள்ளது.
பள்ளியில் தஞ்சம்
இதற்கிடையே வரையாற்றில் ெவள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெளியேறிய நீர் செல்லிபாளையம் கிராமத்தில் உள்ள குண்டாற்றில் கலந்து ஏரிக்கு சென்றது. ஆனால் குண்டாற்றின் கரையிலும் உடைப்பு ஏற்பட்டு, ஊருக்குள் வெள்ளநீர் புகுந்தது. மேலும் ஆறுகளின் கரைகளில் ஏற்பட்ட உடைப்பால் அம்மம்பாளையம், மருவத்தூர், செல்லிபாளையம் ஆகிய 3 கிராமங்களில் உள்ள 250-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த செல்லிபாளையம் கிராம மக்கள் இரவோடு இரவாக வீடுகளை காலி செய்துவிட்டு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் தஞ்சமடைந்தனர். அம்மம்பாளையம், மருவத்தூர் பகுதிகளை சேர்ந்த மக்களில் பலர், வெளியூர்களில் உள்ள தங்களது உறவினர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.
அடிப்படை வசதிகள்
நள்ளிரவில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை துறையூர் தாசில்தார் புஷ்பராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணக்குமார், செந்தில்குமார் மற்றும் செல்லிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் அரவிந்தன் ஆகியோர் செய்து கொடுத்தனர். நேற்று அதிகாலை நீர்வரத்து குறைந்துள்ளது. ஸ்டாலின்குமார் எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பொதுமக்களிடம் நிலைமையை பற்றி விசாரித்தார்.