தமிழக மீனவர்கள் 30 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 30 பேர் டீகோ கார்சியா தீவில் சிறைபிடிக்கப்பட்டனர். பின்னர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2023-10-05 20:55 GMT

நாகர்கோவில்:

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 30 பேர் டீகோ கார்சியா தீவில் சிறைபிடிக்கப்பட்டனர். பின்னர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தமிழக மீனவர்கள்

குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இவ்வாறு செல்லும் மீனவர்கள் 10 நாட்களுக்கும் மேல் கடலில் தங்கி மீன்பிடித்து கரை திரும்புவது வழக்கம்.

அந்த வகையில் கடந்த மாதம் 15-ந் தேதி தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சின்னத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த சைமன் பாஸ்டினுக்கு சொந்தமான மஞ்சுமாதா என்ற 2 விசைப்படகுகளில் குமரி, நாகப்பட்டினம் மற்றும் கேரளமாநிலத்தை சேர்ந்த 32 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

எல்லை தாண்டியதாக சிறைபிடிப்பு

இந்தநிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி பிரிட்டிஷ் கடற்படையினர் 32 பேரையும் சிறைபிடித்தனர். பின்னர் டீகோ கார்சியா தீவுக்கு கொண்டு சென்றனர்.

அங்கு 32 பேரையும் கைது செய்து மீன்கள் மற்றும் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 32 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால் சிறையில் உள்ள குமரி மீனவர்களின் குடும்பத்தினர் கவலை அடைந்தனர்.

இந்திய பெருங்கடலில் டீகோ கார்சியா தீவு உள்ளது. இந்த தீவு இங்கிலாந்து நாட்டுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கைதான குமரி மீனவர்கள் 28 பேர், நாகப்பட்டினம் மீனவர்கள் 2 பேர், கேரள மீனவர்கள் 2 பேருடைய பெயர் விவரம் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

கைதானவர்கள் விவரம்

குமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தை சேர்ந்த சுனில் வாழ்த்தூஸ், ஜெரால்டு பெனாசிர், அனீஸ் வாழ்த்தூஸ், பிஜூ வாழ்த்தூஸ், சைமன், வல்சலன், வின்சென்ட் அந்தோணி நசரேத், சிபு கார்லோஸ், ராஜேஷ்குமார் கிறிஸ்தப்பன், அந்தோணி பத்ரோஸ், ஜோபன் ஜான், விஜின் லூர்தய்யன், ஜோஸ் வாழ்த்தூஸ், அஜிஸ் வின்சென்ட், மரியசுரேஷ் மரியதாசன், ராபின் பாவல்பிள்ளை, தூத்தூரை சேர்ந்த சாஜன் சூசை நாயகம், பிஜூ மோயிஸ், பங்கிராஸ் மத்தியாஸ், சாம் தொபியாஸ், பிராங்கோ மத்தியாஸ், இரவிபுத்தன்துறையை சேர்ந்த அமல்ராஜ் கலஸ்டின், அஜின் அன்புதாசன், லிஜின் ஆன்டனி சேவியர், ஜெஸ்டோ, ஜோஸ் சபரியார், அந்தோணி சேவியர் ஜோசப், மரியஜார்ஜ் கார்லோஸ் ஆகிய 28 மீனவர்களும், நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த சஞ்சுகண்ணு முத்துகுமரன், கார்த்திக் கந்தசாமி, கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் புதியதுறையை சேர்ந்த செபாஸ்டின் ஸ்டூவர்ட், அசாமி.

இந்த தகவலை சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டணி தெரிவித்துள்ளார். டீகோ கார்சியா தீவில் சிறையில் உள்ள 32 மீனவர்களையும், படகுகளையும் மீட்க உதவக்கோரி படகின் உரிமையாளர் சைமன் பாஸ்டின் மற்றும் கைதான மீனவர்களின் குடும்பத்தினர் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்