கணவன்- மனைவிக்கு 3 ஆண்டு சிறை

Update: 2023-07-17 20:08 GMT

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8½ லட்சம் மோசடி வழக்கில் கணவன்- மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

மோசடி வழக்கு

சேலம் மாவட்டம் சின்னையாபுரம் தாசநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் கோபிநாதன் (வயது 28). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த அய்யனார் (42), அவரது மனைவி கலையரசி (35) ஆகியோர் கடந்த 2013-ம் ஆண்டு கூட்டுறவுத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுக்கொண்டனர்.

ஆனால் கோபிநாதனுக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை. வாங்கிய பணத்தையும் அவர்கள் திருப்பி கொடுக்காமல் மோசடி செய்து வந்தனர். இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கோபிநாதன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு சேலம் 6-வது சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

கணவன்-மனைவிக்கு சிறை

இந்த மோசடி வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், கூட்டுறவுத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த குற்றத்திற்காக அய்யனார், அவரது மனைவி கலையரசி ஆகிய 2 பேருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கமலகண்ணன் தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்