3 பெண்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

கும்பகோணம் பஸ் நிலையத்தில் நகை, பணம் திருட்டில் ஈடுபட்ட பெண்கள் 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2023-10-09 21:01 GMT

கும்பகோணம்;

கும்பகோணம் பஸ் நிலையத்தில் நகை, பணம் திருட்டில் ஈடுபட்ட பெண்கள் 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

நகை திருட்டு

கும்பகோணம் அருகே உள்ள தத்துவாஞ்சேரி கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி சுகன்யா(வயது30). இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி தனது 6 பவுன் தங்க சங்கிலியை மெருகூட்ட மணிபர்சில் வைத்து கும்பகோணத்துக்கு எடுத்து வந்தாா்.பின்னர் அவர் குத்தாலத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு செல்ல பஸ்சில் ஏறிய போது மர்ம நபர்கள் அவரது கைப்பையில் வைத்திருந்த தங்க சங்கிலி இருந்த மணி பர்சை திருடி சென்று விட்டனர். இது குறித்து சுகன்யா கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

பணம் திருட்டு

இந்தநிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ந் தேதி நாகை மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பக்கிரிசாமி மனைவி கீதா(53) கும்பகோணத்துக்கு பஸ்சில் வந்து இறங்கினார். பின்னர் அவர் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு தனது கைப்பையை பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மற்றும் ஏ.டி.எம். காா்டை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.இதுகுறித்து கீதா கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கீதாவிடம் பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர்.

ஆந்திராவை சேர்ந்தவர்கள்

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த மீனாட்சி (32) ரேகா (25) கோமதி (27) ஆகியோர் கீதாவிடம் பணத்தை திருடி சென்றது போலீசாருக்கு தெரிய வந்தது. மேலும் மீனாட்சி மற்றும் கோமதி இருவரும் சேர்ந்து சுகன்யாவிடம் இருந்து 6 பவுன் சங்கிலியை திருடி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.இதைத்தொடர்ந்து போலீசார் மீனாட்சி, ரேகா, கோமதி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்குகள் கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி இளவரசி தீர்ப்பு கூறினார்.இதில் சுகன்யாவிடம் தங்க சங்கிலி திருடிய வழக்கில் கோமதி மற்றும் மீனாட்சி இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.கீதாவிடம் பணத்தை திருடிய வழக்கில் மீனாட்சி, ரேகா, கோமதி ஆகிய 3 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனையும் இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்