3 கூரை வீடுகள் எரிந்து நாசம்
கொள்ளிடம் அருகே 3 கூரை வீடுகள் எரிந்து நாசமானது.
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதானம் ஊராட்சி செருகுடி கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன்(வயது 47), என்பவரின் குடிசை வீட்டில் உள்ள மின் வயரிலிருந்து நேற்று மாலை மின்சாரம் கசிந்து கூரையில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அப்போது தியாகராஜன் வீட்டுக்குள் இருந்த சிலிண்டர் வெடித்து தீ மேலும் பரவியது.நேற்று காற்று பலமாக வீசிக் கொண்டிருந்த நேரத்தில் கூரையில் தீ பிடித்ததால் பக்கத்தில் உள்ள கோவிந்தன் மனைவி ஆராயி(62), என்பவரின் குடிசை வீடும், அதனை அடுத்துள்ள பாஸ்கரனின்(40) குடிசைகளிலும் தீ பிடித்தது. இந்த தீ விபத்தில் 3 குடிசை வீடுகளிலும் வைத்திருந்த டி.வி.,மிக்சி, கிரைண்டர், கட்டில் நாற்காலிகள் மற்றும் வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த அனைத்து அத்தியாவசிய பொருட்களும் எரிந்து சாம்பலாயின.இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்டபோது வீட்டிற்குள் யாரும் இல்லாமல் வெளியே வேலைக்கு சென்று இருந்ததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.