வாலிபர் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை - சென்னை கோர்ட்டு தீர்ப்பு
கொலை வழக்கில் 3 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை செசன்சு கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.;
சென்னை பிராட்வே செம்புதாஸ் தெருவை சேர்ந்தவர் தங்கமணி (வயது 22). இவர், அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார்.
கொடுங்கையூரைச் சேர்ந்த பாலாஜி (23) என்பவர் குடித்து விட்டு, அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்ததை, தங்கமணி தட்டி கேட்டுள்ளார்.
இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது. கடந்த 9.1.2021 அன்று தங்கமணி தனது நண்பர் முத்துவுடன் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு அரண்மனைக்கார தெரு சந்திப்பில் சென்று கொண்டிருந்த போது பாலாஜி தனது நண்பர்களான அண்ணாநகரை சேர்ந்த ஸ்ரீநாத் (22), கொருக்குப்பேட்டையை சேர்ந்த ஏலிய்யா (22) ஆகியோருடன் சேர்ந்து தங்கமணியை பீர் பாட்டிலால் தாக்கி கொலை செய்தார்.
இதுகுறித்து எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜி உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி டி.லிங்கேஸ்வரன் முன்னிலையில் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, பாலாஜி, ஸ்ரீநாத், ஏலிய்யா ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.3 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.