வனச்சரகர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்

ஊட்டியில் உள்ள மத்திய மண்வள ஆராய்ச்சி மையத்தில் அனுமதி இன்றி 370 மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில் வனச்சரகர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2022-12-22 18:45 GMT

ஊட்டி

ஊட்டியில் உள்ள மத்திய மண்வள ஆராய்ச்சி மையத்தில் அனுமதி இன்றி 370 மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில் வனச்சரகர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

மண் மற்றும் நீர் ஆராய்ச்சி நிலையம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்த தீட்டுக்கல் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான 234 ஏக்கர் வனப்பகுதி உள்ளது. இதில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய மண் மற்றும் நீர் வள ஆராய்ச்சி மையம் 1955-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஒப்பந்த அடிப்படையில் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் மத்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையம் பகுதியில் மழை மற்றும் பலத்த காற்றுக்கு கீழே விழுந்த மரங்களை அகற்ற வேண்டும் என்று மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மைய அதிகாரி கண்ணனிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறை அதிகாரியின் பரிந்துரை கடிதம் உள்ளிட்ட அரசு விதிகள்படி மரங்களை வெட்டிக் கொள்ளுமாறு பதில் அளித்துள்ளார். இதற்கிடையே கண்ணன் கடந்த செப்டம்பர் மாதம் நீண்ட விடுமுறையில் சென்று விட்டார்.

370 மரங்கள் வெட்டி சாய்ப்பு

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மழைக்கு கீழே விழுந்த மரங்கள் மட்டும் அல்லாமல், காப்புக்காடு பகுதியில் இருந்த மற்ற மரங்களையும் அனுமதி இன்றி வெட்டி கடத்தியுள்ளனர். காப்புக்காட்டில் இருந்த 370 மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் வனத்துறை அதிகாரிகளும், மத்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மைய அதிகாரிகள் ஒரு சிலரும் தனியார் காண்டிராக்டர் ஒருவரும் ஈடுபட்டு உள்ளனர்.

விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு வந்த கண்ணன் இது குறித்து கேள்விப்பட்டு, சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு வனத்துறை அலுவலகம் மற்றும் ஊட்டி புறநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து நீலகிரி வன அதிகாரி ஒருவர் கூறுகையில், மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு ரூ.48 லட்சம் மதிப்புள்ள மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்ததை தொடர்ந்து அது குறித்து தனியாக விசாரணை நடந்து வருகிறது. மேலும் இதில் மத்திய மண்வள ஆராய்ச்சி மைய அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளதால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு டேராடூனில் உள்ள மத்திய மண் மற்றும் நீர் ஆராய்ச்சி மைய தலைமையகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது, என்றார்.

பணி இடை நீக்கம்

இந்த நிலையில் முதல் கட்டமாக வனச்சரகர் நவீன், மற்றும் வனக்காப்பாளர் பாபு, வனவர் சசி ஆகிய 3 பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதேபோல் மத்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மைய அதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்படலாம் என்றும், அதற்கான விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்