வெறிநாய் கடித்து மாணவர்கள் உள்பட 3 பேர் படுகாயம்

கறம்பக்குடி அருகே வெறிநாய் கடித்து 2 பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2023-08-16 17:57 GMT

வெறிநாய்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு வகையான நோய் தாக்குதலுக்கு ஆளான நாய்கள் கூட்டம் கூட்டமாக தெருக்களில் அலைந்து திரிகின்றன.

அவ்வப்போது ஆடு, மாடுகளை கடித்து காயப்படுத்துவது தொடர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் கறம்பக்குடி அருகே உள்ள நெய்வேலி கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை வெறிநாய் ஒன்று கடித்து காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

3 பேர் படுகாயம்

இந்நிலையில் இன்று காலை நெய்வேலி கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் புவனேஸ்வரன் (வயது 14), மருதேஸ் (12) ஆகிய இருவரும் அப்பகுதியில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை துரத்தி சென்ற வெறிநாய் 2 பேர் மீதும் பாய்ந்து வயிறு, கை, கால் பகுதிகளை கடித்து குதறியதில் படுகாயமடைந்தனர்.

மாணவர்களின் அலறல் சத்தத்தை கேட்ட அப்பகுதியை சேர்ந்த பாலமுருகன் (29) என்பவர் நாயின் தாக்குதலில் இருந்து மாணவர்களை காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் மீது பாய்ந்த வெறிநாய் வயிற்று பகுதியை கடித்து விட்டு ஓடி சென்றது.

மாணவனுக்கு ஒவ்வாமை

இதை கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள், படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு காலை வேளையில் டாக்டர்கள் பணியில் இல்லை. செவிலியர்கள் மட்டுமே முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

இதனால் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பணிக்கு வந்த டாக்டர் 3 பேருக்கும் சிகிச்சை அளித்தார்.

இதில் மாணவன் புவனேஸ்வரனுக்கு ஒவ்வாமை ஏற்பட்டது.

கோரிக்கை

இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். மற்ற இருவரும் கறம்பக்குடி மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கறம்பக்குடியில் தெரு நாய்களை கட்டுப்படுத்தவும், அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்