குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது

குறைந்த வட்டியில் கடன் தருவதாக ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்ட 3 பேரை அரியலூர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-10 18:34 GMT

குறைந்த வட்டியில் கடன்

அரியலூர் மாவட்டம் கழுமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 24). இவருக்கு குறைந்த வட்டியில் கடன் தருவதாக ஆசை வார்த்தை கூறிய மர்ம ஆசாமிகள் ரூ.46 ஆயிரத்து 250-ஐ ஏமாற்றினர். இதையடுத்து சதீஷ்குமார் அரியலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் படி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு காமராஜ் (இணைய குற்றப்பிரிவு பொறுப்பு) வழிகாட்டுதலின்படி அரியலூர் மாவட்ட இணைய குற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் வாணி தலைமையில் தொழில்நுட்ப சப்-இன்ஸ்பெக்டர் சிவனேசன், போலீசார் சுரேஷ் பாபு, சுதாகர் மற்றும் ரஞ்சித்குமார் ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது.

3 பேர் கைது

இவர்கள் நடத்திய பல்வேறு கட்ட விசாரணையில் குற்றவாளிகள் டெல்லியில் இருப்பது தெரியவந்தது. மேலும் குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து வந்ததில் குற்றவாளிகள் சிலர் நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பட்டி என்ற பகுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சிறப்பு குழுவினர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மல்லசமுத்திரம் கிராமத்திற்கு சென்று, இணைய மோசடியில் ஈடுபட்ட மூர்த்தியின் மனைவி உஷா (34), ராமன் மகன் மூர்த்தி (39), நல்லமுத்து மகன் செங்கோடன் (58) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

மேலும் இவர்களிடமிருந்து லேப்டாப், 4 செல்போன்கள், 13 ஏ.டி.எம் கார்டுகள், வங்கி கணக்குப்புத்தகம் மற்றும் ரூ.35 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்