மலேசியாவில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட 3 கிலோ தங்கம் பறிமுதல்

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-10-08 22:21 GMT

தீவிர கண்காணிப்பு

திருச்சியில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மற்றும் வளைகுடா நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் அந்த நாடுகளில் இருந்தும் திருச்சிக்கு விமான சேவை உள்ளது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் பயணிகள் வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு வரும்போது தங்கத்தை கடத்தி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் தங்கம் கடத்தல் மீண்டும் அதிகரித்து இருக்கிறது.

தங்கம் பறிமுதல்

இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னை யை சேர்ந்த சாதிக் அலி (வயது 40), அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளின் காலணியில் மறைத்து பசை வடிவில் எடுத்து வந்த 1 கிலோ 900 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1 கோடியே 8 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக அந்த தம்பதியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை பயணி கைது

இதேபோன்று கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று முன்தினம் வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணியான புதுக்கோட்டையைச் சேர்ந்த செங்குட்டுவன் (37) என்பவர் தனது உடலில் மறைத்து எடுத்து வந்த ரூ.61 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பிலான 1 கிலோ 60 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக சாதிக் அலி, அவரது மனைவி மற்றும் செங்குட்டுவன் ஆகியோர் மீது அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, அதில் செங்குட்டுவனை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களில் மொத்தம் 2 கிலோ 960 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்