காரில் கஞ்சா கடத்திய கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து கோயம்புத்தூருக்கு காரில் கஞ்சா கடத்திய கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-17 23:12 GMT

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உள்ளது. இங்கு நேற்று காலை சிப்காட் சப்-இன்ஸ்பெக்டர் குமணன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரில் 5 கிலோ எடைகொண்ட 4 பெரிய பண்டல்களில் 20 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கல்லூரி மாணவர்கள் கைது

விசாரணையில் அவர்கள் கோயம்புத்தூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களான நந்தகுமார் (வயது 23), வசந்த் (22) மற்றும் சரண் (20) என்பதும், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு குருவி போல காரில் கஞ்சா கடத்த முயன்றபோது போலீசாரிடம் சிக்கியது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களிடம் இருந்து காரையும், கஞ்சாவையும் பறிமுதல் செய்து கல்லூரி மாணவர்களான 3 பேர் மீதும் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் இதன் பின்னணியில் உள்ள கஞ்சா வியாபாரிகள் கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்