ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்த 3 பேர் கைது

ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-29 18:35 GMT

ரெயில்வே வேலை

கரூர் மாவட்டம், தாந்தோணிமலை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ரெங்கநாதன். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், டீச்சர்ஸ் காலனி, வசந்தம் நகரை சேர்ந்தவர் ஆனந்தி. ராஜபாளையம் கே.ஆர்.நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவர்கள் 3 பேரும் கூட்டாக சேர்ந்து ரெங்கநாதன் என்பவர் தென்னக ரெயில்வேயில் தலைமை கணக்காளராக பணியாற்றி ஓய்வு பெற்றதாகவும், தனது மகள் ஆனந்தி மதுரை கோட்டத்தில் செக்சன் ஆபீசராக ரெயில்வேயில் பணியாற்றி வருவதாக கூறியுள்ளனர்.மேலும் அவர்களது அடையாள அட்டையை காட்டியும், ரெயில்வேயில் உள்ள மூத்த அதிகாரிகள் தனக்கு நன்கு பழக்கம் என கூறி கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை, வாஞ்சிநாதன் நகரை சேர்ந்த கருப்பண்ணன் என்பவரிடமும், அவரின் மூலம் 45 பேரிடம் ரெயில்வேயில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி நம்பவைத்து ஏமாற்றி ரூ.2 கோடியே 7 லட்சம் பெற்றுள்ளனர். அதற்கு பதிலாக தனது வங்கி காசோலையை பணம் கொடுத்தவர்களுக்கு கொடுத்தும், வேலைக்காக பணம் வரும்போதெல்லாம் ஆனந்தி மற்றும் ரமேஷ் உடனிருந்து நம்பிக்கை வார்த்தை கூறி பணத்தை பெற்றுள்ளனர்.

புகார்

பின்னர் குறிப்பிட்ட நாட்களில் வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் இருந்ததால், புகாரின் பேரில் கரூர் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். விசாரணையில் கருப்பண்ணன் மூலம் பணம் கொடுத்த மற்றவர்கள் அனைவரும் கருப்பண்ணன் என்பவர்தான் எங்களிடம் பணம் பெற்று ரெங்கநாதன் என்பவரது வங்கி காசோலையை தன் கைப்பட நிரப்பி கொடுத்து தங்களிடம் மோசடியாக பணத்தை பெற்றுக்கொண்டு, கருப்பண்ணன் மற்றும் ரெங்கநாதன், ஆனந்தி, ரமேஷ் ஆகியோர் கூட்டுசேர்ந்து பணத்தை தங்களுக்குள் பிரித்துக்கொண்டு ஏமாற்றியுள்ளதாக தெரியவந்தது.இந்நிலையில் ரெங்கநாதன் என்பவர் மீது தூத்துக்குடியை சேர்ந்த சுப்பையா என்பவர் கொடுத்த புகாரில், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பலருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பணம் பறித்த வகையில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

3 பேர் கைது

இந்நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கருப்பண்ணன், ஆனந்தி, ரமேஷ் ஆகிய 3 பேரும் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தனர். இந்நிலையில் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின்படி, கரூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவாக இருந்து ஆனந்தி, ரமேஷ் மற்றும் கருப்பண்ணன் ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் சிறப்பாக விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு, சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்