வயதை குறைத்து ஏமாற்றி 2-வது திருமணம்: இளம்பெண் சித்ரவதை - வெளிநாட்டு மாப்பிள்ளை கைது

அமெரிக்க வாழ் என்ஜினீயரான பாஸ்கரை இளம்பெண் 2-வது திருமணம் செய்து கொண்டார்.

Update: 2024-02-11 18:14 GMT

சேலம்,

சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவருடைய மகள் ஆர்த்தி (வயது 28). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவருடைய கணவர் கண்ணன் கொரோனா பாதிப்பில் இறந்து விட்டார்.

இதனால் ஆர்த்தி சேலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் சேலம் சீலநாயக்கன்பட்டி ஜி.ஆர். நகரை சேர்ந்த அமெரிக்க வாழ் என்ஜினீயரான பாஸ்கர் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். என்ஜினீயர் பாஸ்கருக்கும் இது 2-வது திருமணம் ஆகும்.

சீலநாயக்கன்பட்டி பகுதியில் வசித்து வந்த பாஸ்கர்-ஆர்த்தி ஆகிய இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு உள்ளது. கடந்த 9-ந்தேதி இரவு கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த பாஸ்கரின் மனைவி ஆர்த்தி மற்றும் 2 குழந்தைகளை சீலநாயக்கன்பட்டி பகுதியில் ரோட்டில் இறக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் நள்ளிரவில் ரோட்டில் தவித்த ஆர்த்தியை அவரது உறவினர்கள் மீட்டு அழைத்து சென்றனர். இந்த நிலையில் சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் கணவர் பாஸ்கருக்கு சொந்தமான தங்கும் விடுதியில் அவர் இருப்பதாக தெரிந்து அங்கு சென்றார். அப்போது அங்கிருந்த பாஸ்கருக்கும், ஆர்த்திக்கும் தகராறு ஏற்பட்டது.

இது குறித்து பாஸ்கர் சேலம் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பாஸ்கரை போலீசார் விசாரணைக்காக வேனில் ஏற்றினர்.

அப்போது போலீஸ் வேன் முன்பு ஆர்த்தி அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இந்த நிலையில் ஆர்த்தி சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

பாஸ்கர் 2-வது திருமணம் செய்யும் முன்பு என்னையும், எனது 2 குழந்தைகளையும் நன்றாக பார்த்துக்கொள்கிறேன் என்று கூறினார். இதை நம்பி அவரை 2-வது திருமணம் செய்து கொண்டேன். மேலும் அவர் 55 வயதானவர் என்பதை மறைத்து 45 வயது என்று கூறி என்னை ஏமாற்றி 2-வது திருமணம் செய்து கொண்டு தினமும் அடித்து துன்புறுத்துகிறார்.

கடந்த 9-ந்தேதி இரவு கொலை மிரட்டல் விடுத்து என்னையும், எனது குழந்தைகளையும் நடுரோட்டில் இறக்கிவிட்டு சென்று விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் பாஸ்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்