சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வை 2,800 பேர் எழுதினர்

சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வை 2,800 பேர் எழுதினர்.

Update: 2022-06-05 20:20 GMT

திருச்சி:

முதல்நிலை தேர்வு

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 24 வகையான சிவில் சர்வீசஸ் பணியிடங் களுக்கான தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இதில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மூன்று கட்டங்களாக தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வு, நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். காலை மற்றும் மாலையில் தேர்வுகள் நடைபெற்றன. தேர்வு எழுத வந்தவர்களுக்கு முதலில் சுகாதார பணியாளர்கள் உடல் வெப்பநிலையை தேர்மல் ஸ்கேனர் கருவி கொண்டு பரிசோதித்தனர்.

பின்னர் அவர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கினர். தேர்வு அறைக்குள் தேர்வாளர்களை காலை 8.59 மணி வரை மைய கண்காணிப்பாளர்கள் அனுமதித்தனர். அதற்கு மேல் வந்தவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் ஹால் டிக்கெட், ஏதாவது ஒரு அடையாள அட்டை வைத்திருந்த தேர்வாளர்கள் மட்டுமே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கடுமையான சோதனை

முன்னதாக கடுமையான சோதனைக்கு பிறகே தேர்வர்கள், தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை மற்றும் மாலையில் நடைபெற்ற தேர்வை எழுத மொத்தம் 5,818 பேர் தகுதி பெற்றிருந்தனர். இதில் காலையில் 2,845 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 2,973 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதேபோல் மாலையில் நடைபெற்ற தேர்வை 2,819 பேர் மட்டுமே எழுதினர். 2,999 பேர் தேர்வு எழுத வரவில்லை. திருச்சியில் குடிமைப்பணி முதல்நிலை தேர்வு நடந்த மையத்தை கலெக்டர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்